Published : 12 Apr 2017 03:39 PM
Last Updated : 12 Apr 2017 03:39 PM
'அசுரத்தனமான அறையால் கன்னம் சிவந்திருக்கிறது. தோலில் பலமான சிராய்ப்பு. ஒரு பக்கக் காது கேட்கவில்லை. லத்தியால் காலில் பலமுறை அடித்ததால், சதை கிழிந்துவிட்டது. உட்கார முடியவில்லை'. நின்றுகொண்டே பேசுகிறார் ஈஸ்வரி.
மதுக்கடைகளுக்கு எதிராகத் திருப்பூரில் போராட்டம் நடத்திய சாமான்யப் பெண்.
நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், திருப்பூர் சாமளாபுரத்தில் புதிய மதுக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதை அறிந்த பொதுமக்கள், சோமனூர் - காரணம்பேட்டை சாலையில் செவ்வாய்க் கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர்தான் இந்த ஈஸ்வரி.
அவர் காலை முதலே ஏராளமான பெண்களுடனும், குழந்தைகளுடனும் உக்கிரமான வெயிலில் சாலையில் அமர்ந்து போராடிக் கொண்டிருந்தார். சுமார் 7 மணி நேரமாக போராட்டம் நடைபெற்றும், எந்தவொரு அதிகாரியும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. திடீரென மாலை 4 மணியளவில் அங்குள்ள கடைகளையும் அடைக்கவும், அனைவரும் கலைந்து செல்லவும் போலீஸார் உத்தரவிட்டனர்.
இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த ஒரு மணிநேரத்தில் போலீஸாரும், அதிரடிப் படையினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
குறிப்பாக திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஈஸ்வரியை ஓங்கி அறைந்ததும், லத்தியால் கொடூரமாகத் தாக்கிய காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில் ஈஸ்வரியுடனான ஓர் உரையாடல்...
எப்படி இருக்கிறீர்கள்?
பளார்னு அறைஞ்சதுல காதுல இன்னும் வலி இருக்குதுங்க. லத்தியால் கால்ல பயங்கரமா அடுச்சுப் போட்டாரு. உட்காரவே முடியல.சாயந்தரம் ஸ்கேன் பாக்கோணும்னு ஆஸ்பத்திரில கூப்டுருக்காங்க. போயிப் பார்த்தாத்தான் என்னனு தெரியும்.
இதுதான் நீங்கள் கலந்துகொள்ளும் முதல் போராட்டமா?
ஆமாங்க, மொத முறையா மதுக்கடைக வேணாம்னு போராடப் போனேன். அங்க இப்புடி ஆகிப் போச்சு. முன்னாடி விசைத்தறி சம்பந்தமான உண்ணாவிரதத்துல கலந்துருக்கேன். மதுக்கடைக்கு எதிரான போராட்டத்துக்கு நேத்துத்தான் மொதத்தடவை போனேன்.
உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் சென்றது தெரியுமா?
என் வீட்டுக்காரருக்கு நான் போறது தெரியாதுங். பக்கத்தூட்டுக் காரங்க வந்து கூப்டாங்க. செரின்னு கெளம்பிப் போயிட்டேன். இத்தன நடந்ததுக்கு அப்பறம்தான் அவருக்குத் தெரிஞ்சுது.
போராட்டக் களத்துக்குச் செல்லும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
வீட்டுல ஒருத்தருக்கும் குடிப் பழக்கம் இல்லீங்க. ஆனா ஊர்க்காரங்க கொஞ்சப்பேரு அதுல சிக்கிச் சீரழிஞ்சுட்டு இருந்தாங்க. பொது மக்களும் அதுனால அவஸ்தப்பட்டாங்க. குடிச்சுட்டு வண்டி ஓட்டறதால எத்தனையோ ஆக்ஸிடெண்ட் வேற நடக்குது. எங்களுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்ல. சரி நம்மளும் போய் போராடுவோம்னு நெனச்சேன். போனேன்.
போராட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து உங்கள் கணவர், மகன்கள் என்ன சொல்கின்றனர்?
அவரு ரொம்ப வருத்தப்பட்டாருங்க. 'கல்யாணமாகி 26 வருஷத்துல உன்னை ஒரு தடவையாவுது கைநீட்டி இருப்பனா? இப்போ அடுத்தவங்கிட்ட அடி வாங்கிட்டு வந்தி நிக்கறயே?'ன்னு அழுதுட்டாருங்க. பொறந்தவீட்டுலயும் என்னை அடிச்சதில்லை. வருத்தப்பட்டவரு ஒண்ணுஞ் சொல்லாம எங்கியோ கெளம்பிப் போய்ட்டார்.
ஒரு பையன் தறி ஓட்டறான்; இன்னொரு பையன் காலேஜ்ல படிக்கறான். அவங்க ரெண்டு பேரும், 'என்ன ஆனாலும் பரவால்லமா, நாம போராட்டத்துக்கு போலாம்'னு சொல்றாங்க. ஆனாலும் 'நாங்க இருக்கும்போது, ஒருத்தரு நம்ம அம்மாவை அடிச்சிட்டாரே'ன்னு அவங்களுக்கு வருத்தம்.
தாக்குதலுக்கு உள்ளான ஈஸ்வரி. படம்: கார்த்திகேயன் |
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதி நாளிலும் காவல்துறை தனது அராஜகத்தை நிறைவேற்றியது. இப்போது மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போதும் கொடூரமாய்த் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையின் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. முழுசா மதுவிலக்க அமல்படுத்தணும். அந்த ஏடிஎஸ்பியை வேலைய வுட்டுத் தூக்கணும். அவ்வளவுதான்.
மதுவின் பாதிப்புகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மதுனால என்ன நடக்குதுன்னு நாஞ்சொல்லித்தான் தெரியோணுமுங்களா? அதான் வீடு வீட்டுக்கு அடிதடி, ரகளை நடக்குதே. கொழந்தைகளுக்கு சாப்பாடு கூட போட முடியாத நெலைல நெறையா பொண்ணுக இருக்காங்க.
எத்தனையோ குடும்பங்க இதுனால பிரிஞ்சு வாழுதுங்க. எத்தன பேரு தாலி அறுத்து நிக்கறாங்க தெரியுங்களா?
முழுமையான மதுவிலக்கு சாத்தியமா?
முயற்சி செஞ்சா கண்டிப்பா முடியுங்க. போராட்டத்துல கலந்துக்கிட்ட எல்லாருக்கும் அடி வுழுந்துச்சு; அதுல எனக்கு அதிகமா வுழுந்துருச்சுங்க. அதுனால எல்லாரும் வந்து எங்கட்ட கேக்கறாங்க. என்னையப் பொருத்தவரைக்கும் வீட்டுக்காக மட்டுமல்ல; நாட்டுக்காகவும், பொண்ணுகளுக்காகவும் நல்லது நடக்கோணும்.
இத்தனை அடிய வாங்கீட்டு வந்தாச்சு; இனி என்ன நடந்தாலும் ஒரு கை பார்த்துடலாம்னுதான் தோணுது.
சொல்லும் ஈஸ்வரியின் குரலில் ததும்பி வழிகிறது தன்னம்பிக்கையும், தைரியமும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT