Published : 08 Apr 2017 10:37 AM
Last Updated : 08 Apr 2017 10:37 AM
பார்வையற்ற அந்த முதியவருக்கு வயது 70-க்கு மேல் இருக்கும். தினமும் கடும் நெரிசலில் மின்சார ரயிலில் கடலை மிட்டாய் விற்கிறார். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கீழே சிந்தும் காய்கறிகளை ஜனநெரிசலில் அடிபட்டு, மிதிபட்டு சேகரித்து சாலையோரம் கூறுகட்டி விற்கிறார்கள் சில மூதாட்டிகள். இவர்களுக்கு என்ன கிடைத்துவிடும் ஒரு நாளைக்கு? ஆனால், உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்!
சென்னையில் ஒரு பல்பொருள் அங்காடியில் யாரோ தவறவிட்டுச் சென்ற தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைத்தி ருக்கிறார் கடையின் பணிப்பெண். அவர் மிகவும் ஏழை. அவரிடம் பேசினால், ‘அண்ணா, ஒரு குண்டுமணி தங்கம் வாங்குறது எவ்வளவு சிரமம்னு எனக்கு தெரியும்ணா’ என்கிறார்.
சென்னை சாந்தி தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே சுட்டெரிக்கும் வெயிலில், கொதிக்கும் தார்ச்சாலையில் மாற்றுத்திறன் பெண் ஒருவர் காலை நீட்டி அமர்ந்திருப்பார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காசு கொடுத்துவிட்டு சில அடிகள் நடந்திருப்பேன். ‘தம்பி, தம்பி...’ என்று பரபரப்பாக அழைத்தார். திரும்பிப் பார்த்தால் எனது கால்சட்டை பையில் இருந்து நான்கைந்து ஐநூறு ரூபாய் தாள்களை தவற விட்டிருக்கிறேன். அவர் நினைத்திருந்தால் அதை எடுத்துக்கொண்டிருக்கலாம்.
இங்கே சாமானிய மக்களிடம், பிச்சை எடுப்பவர்களிடம் இருக்கும் நேர்மைகூட ஆட்சி யாளர்களிடம் இல்லை. சுடுகாட்டுக் கூரையில் திருடுகிறார்கள், சுனாமி நன்கொடையில் திருடு கிறார்கள், சத்துணவு முட்டையில் திருடு கிறார்கள், இலவச அரிசியில் திருடுகிறார்கள், வறட்சி நிவாரண நிதியில் திருடுகிறார்கள், உயிர் காக்கும் மருந்துகளில் திருடுகிறார்கள், கழிப்பறை கட்டும் நிதியில் திருடுகிறார்கள்... மக்களுக்காக போடும் அத்தனை திட்டங்களி லும் திருடுகிறார்கள். திருடுவதற்காகவே திட்டங்களை உருவாக்குகிறார்கள்.
கடந்த காலங்களில் தமிழகத்தின் ஆயிரக் கணக்கான ஊராட்சிகளில் வகைதொகையின்றி ஊழல் நடந்தது. பல கோடி பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இவை எல்லாம் தணிக்கை களில் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியபோது, ‘ஊழல் பணத்தை திரும்பப் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று பதில் வந்தது. ஆனால், அடுத்தடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் மீண்டும் இவர்களே போட்டியிடுகிறார்கள். குறைந்த பட்சம் இவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியிழப்பு கூட செய்யப்படவில்லை.
நம் நாட்டில் ஓர் ஏழை விவசாயி வங்கிக் கடனைக் கட்டவில்லை என்றால் வீட்டில் புகுந்து பொருட்களைப் பறிமுதல் செய்யும் உரிமை வங்கிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும் பத்தில் கணவனோ, மனைவியோ வருமான வரி செலுத்தவில்லை என்றால் தேர்தலில் நிற்கும் தகுதியை இழக்கிறார்கள். ஆனால், உள்ளாட்சியில் ஊழல் செய்தவர்களைக் கண்டறிந்த பின்பும் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. குறைந்தபட்சம் அவர்கள் தேர்தலில் நிற்க தகுதியிழப்புகூட இல்லை.
இத்தனைக்கும் உள்ளாட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை நான்கு அடுக்குப் பாதுகாப்பு வளையங்கள்போல தணிக்கைக் குழுக்கள் கண்காணிக்கின்றன. முதலில் உள்ளாட்சித் துறையின் உள்தணிக் கைத் துறை, அடுத்து மாநில நிதித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை, அதன் பிறகு மத்திய அரசின் தணிக்கைத் துறை தணிக்கை செய்கின்றன. இவை போக மக்களால் செய்யப்படும் சமூகத் தணிக்கை தனி.
இவ்வளவு தணிக்கைகளுக்கு பிறகு அவற்றை ஊராட்சி அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிகளின் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்கிறார்கள். பேரூராட்சி அளவில் பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குநர், பேரூராட்சிகள் இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்கிறார். நகராட்சி, மாநகராட்சிகளில் ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் ஆய்வு செய் கிறார்கள். இவ்வளவு பேர் தணிக்கை செய்தும் திட்டங்களில் முறைகேடு நடக்கின்றன.
ஒருவகையில் இன்று உள்ளாட்சிகளின் அதிகாரங்கள் படிப்படியாக மாநில அரசால் பறிக்கப்பட்டதற்கு காரணமே ஊழல்கள்தான். அதேசமயம் மாநில அரசு நல்லாட்சி புரிவதற்காக ஒன்றும் அதிகாரங்களைப் பறிக்கவில்லை. அதிகாரங்களைப் பறித்ததன் மூலம் மாநில அரசே நேரடியாக ஊழலில் ஈடுபடுகிறது.
உள்ளாட்சிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களில் முக்கியமானது நிதியைக் கையாளும் அதிகாரம். மத்திய நிதிக்குழு, மாநில நிதிக் குழு மற்றும் உள்ளாட்சிகள் வசூல் செய்யவேண்டிய வரிகள் ஆகிய 3 வழிகளில் உள்ளாட்சிகளுக்கு நேரடியாக நிதி வரவேண்டும். ஆனால், மேற்கண்ட நிதிகளில் பெரும் பகுதியை இன்று தமிழக அரசே நேரடியாகக் கையாள்கிறது. உள்ளாட்சி களுக்கு செல்லவேண்டிய நிதி மாநில அரசின் பெரும் திட்டங்களுக்கு செலவிடப்படுகின்றன.
தங்கள் கிராமப் பஞ்சாயத்துக்கு என்ன திட்டம் வேண்டும்? அந்தத் திட்டத்துக்கு என்ன பொருள் வாங்கலாம்? என்ன விலையில், எந்த தரத்தில், யாரிடம் வாங்கலாம்? என்பதை எல்லாம் உள்ளாட்சி அமைப்புகள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அனைத்தையும் மாநில அரசே முடிவு செய்கின்றன. அத்தனையிலும் ஊழல்!
தற்போது மத்திய அரசு 2017-18ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உள்ளாட்சிகளுக்காக மிகப் பெரிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 2019 அக்டோபர் 2-ம் தேதி காந்தியின் 150-வது பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி ‘மிஷன் அந்த்யோதயா’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. காந்தியின் 150-வது பிறந்த நாளுக்குள் இந்தியாவில் உள்ள ஒரு கோடி குடும்பங்களை வறுமையில் இருந்து விடுவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதற்காக நாடு முழுவதும் 50,000 கிராமப் பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1,000 கிராமப் பஞ்சாயத்து களில் இது செயல்படுத்தப்படும். இந்த திட்ட நிதியிலும் மாநில அரசே கைவைக்க முனையும். உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கு மாநில அரசுக்கு இருக்கின்ற சுயலாப காரணங்களில் இதுவும் ஒன்று.
இஸ்லாமிய சிந்தனையாளரும், பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவருமான கொடிக் கால் ஷேக் அப்துல்லாவிடம் பேசும்போது சொன்னார்: கேரளாவில் 1967-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒருசேர தேர்தல் நடந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும்பான்மை பலத்தில் வெற்றி பெற்றது.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் முகுந்த புரம் தொகுதியில் மட்டும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (காங்கிரஸ்) பனம்பள்ளி கோவிந்தமேனன் வெற்றி பெற்றார். அவர் மத்திய சட்டம் மற்றும் ரயில்வே துறை அமைச்சராகவும் ஆனார்.
அப்போது கேரள மக்கள், ‘‘மத்தியில் இடதுசாரிகள் ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரியும். ஆனால், எங்கள் மாநிலத் துக்கு இடதுசாரிகள் ஆட்சிதான் தேவை. அதேசமயம், மாநில உரிமைகளைப் கேட்டுப் பெற ஒருவராவது தேவை என்பதால் பனம் பள்ளி கோவிந்தமேனனை வெற்றிபெற வைத்தோம்’’ என்றார்கள்.
ஆம். முகுந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதி யில் இருந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி டெபாசிட்டை இழந்த நிலையில் அக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் மட்டுமே அங்கு வெற்றி பெற திட்டமிட்டு நடத்தப்பட்ட அதிசய அரசியல் நிகழ்வு நடந்த மாநிலம் கேரளா. தங்களுக்கு என்ன தேவை, யார் தேவை என்பதை இன்று வரை தெளிவாக தீர்மானிக்கிறார்கள் கேரள மக்கள். கேரள மக்களின் தொன்றுதொட்டுத் தொடரும் அரசியல் விழிப்புணர்வுக்கு சாட்சியம் இது!
இப்போது தமிழகத்துக்கு தேவை அந்த அரசியல் விழிப்புணர்வுதான்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணத்தைக் கொடுத்து எதையும் சாதித்துவிடலாம் என்று நினைக்கிறது அதிகார வர்க்கம். அவர்களைப் புறக்கணியுங்கள், நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்கட்டும்!
(நிறைந்தது) | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT