Published : 24 Mar 2017 09:56 AM
Last Updated : 24 Mar 2017 09:56 AM
இன்று உலக காசநோய் தினம்
நாள் முழுவதும் விடாத இருமல், சளி தொல்லையால் ஒவ்வொரு நிமிடத்தையும் நரக வேதனையுடன் கடந்து செல்பவர்கள் காசநோயாளி கள். காசநோயை கண்டுபிடிக்காமல் விட்டால் ஒருகட்டத்தில் எடை குறைந்து, உடல் எலும்புகள் வலு விழந்து நோயாளிகள் மரணம் அடையும் நிலை ஏற்படக்கூடும். ‘எய்ட்ஸ்’ போன்ற மனித சமுதா யத்தை அச்சுறுத்திய உயிர்க் கொல்லி நோய்களைக்கூட கட்டுப்படுத்திவிட்ட இந்த நவீன மருத்துவ உலகில், தற்போது வரை காசநோயை ஒழிக்க, கட்டுப்படுத்த முடியவில்லை.
‘திருத்தப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின்’ கீழ் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை, இந்த நோயை கண்டுபிடிப்பதற்கான, மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள், மாத்திரைகள் இலவச மாகக் கிடைக்கிறது. நோயாளி களுக்கு காசநோய் பற்றிய புரிதல் இல்லாமை, சமூகம் மற்றும் குடும் பத்தார் புறக்கணிப்பு, காசநோயு டன் மற்ற நோய்களும் சேர்ந்து வருவதால் இந்நோயால் மரணங் கள் அதிகரித்துள்ளன.
22 லட்சம் புதிய நோயாளிகள்
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நுரையீரல் மருத்துவப் பிரிவு மருத்துவர் ஆர்.பிரபாகரன் கூறியதாவது: ‘‘இந்தியாவில் ஆண்டுக்கு புதிதாக 22 லட்சம் பேருக்கு காச நோய் வருகிறது. ஆண்டுக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் இறக்கின்றனர். காசநோய், முடி, நகத்தைத் தவிர நாக்கு, காது, கண், பல், இதயம், உள்ளிட்ட உடலின் எல்லா உறுப்புகளிலும் வரும். ஒருவருக்கு காசநோய் வந்தால் அவர் மூலம் மற்றவர்களுக்கு அந்நோய் பரவும் என்ற தவறான புரிதல் இருக்கிறது.
நோய் பரவாமல் தடுக்க...
நுரையீரல் காசநோய் வந்தவர் கள் மட்டுமே இருமல், தும்மல் வரும்போதும் அவர்களிடம் இருந்து காற்றில் நீர் திவலைகள் பரவி மற்றவர்களுக்கு காச நோய் ஏற்படுகிறது. மற்ற உடல் உறுப்புகளில் காசநோய் ஏற்பட்டால் அவர்கள் மூலம் காச நோய் பரவாது.
நுரையீரல் காசநோயாளிகள் மாத்திரைகள் உட்கொள்ள ஆரம்பித்தால் ஒரு வாரத்தில் அவர்களிடம் இருந்து மற்றவர் களுக்கு நோய் பரவும் தன்மை குறைகிறது. அதனால், நுரையீரல் காச நோயாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை சிகிச்சை எடுக்க வைத்தாலே காசநோய் பரவுவதை கட்டுப்படுத்திவிடலாம் என்ற நோக்கத்துடன் காசநோய் சிகிச்சைத் திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன’’ என்றார்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
காசநோய் குறித்து டாக்டர் பிரபாகரன் மேலும் கூறும்போது, “காசநோய் 3,500 ஆண்டுகளுக்கு மேலாக மனித சமூகத்தில் இருக்கிறது. பொதுவாகவே ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மரபுரீதியாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. அதனால் உலக அளவில் சீனா, இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படும் காசநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. காசநோயை குணப்படுத்த அரசு நிறைய வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்தாலும் மக்களிடம் காசநோய் பற்றிய புரிதல், விழிப்புணர்வு இன்னும் ஏற்படாததால் மக்களுக்கு அவை 100 சதவீதம் சென்றடைவதில்லை.
காசநோயாளிகள் 2 மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு நோய் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு உடல் ஆரோக்கியம் ஏற்படும். பலர் 2 மாதத்தில் மாத்திரை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகின்றனர். ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டால் 6 மாதங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அது குணமடையாதபட்சத்தில் 8 மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT