Last Updated : 12 Jul, 2016 02:02 PM

 

Published : 12 Jul 2016 02:02 PM
Last Updated : 12 Jul 2016 02:02 PM

திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் இலங்கை அகதியை மண்டபம் முகாமுக்கு மாற்ற உத்தரவு: மனைவி, குழந்தைகளுடன் தங்கியிருக்க அனுமதி

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருக்கும் இலங்கை அகதியை மண்டபம் முகாமுக்கு மாற்றவும், அங்கு மனைவி, குழந்தைகளுடன் அவர் தங்கியிருக்க அனுமதிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த இலங்கை அகதி டி.உதயகலா உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு:

என் கணவர் தயாபரராஜ். எங்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். நாங்கள் 5.5.2014-ல் குடும்பத்துடன் படகு மூலம் இந்தியா வந்தோம். பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியா வந்ததாக போலீஸார் எங்களைக் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் எங்களுக்கு ஒரு ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது.

தண்டனை காலம் முடிந்து என்னை விடுதலை செய்தனர். என் கணவரை விடுதலை செய்யவில்லை. அவரை திருச்சி சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். கணவரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பொதுத்துறை சார்பு செயலர் சலீம், கியூ பிராஞ்ச் எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். திருச்சி முகாமில் இருந்து தயாபரராஜ் ஆஜர்படுத்தப்பட்டார்.

மனுதாரர் டி.உதயகலா தன் 3 குழந்தைகளுடன் நேரில் ஆஜரானார். அவர் நீதிபதிகளிடம் கூறும்போது, இலங் கையில் போர் முடிந்த நிலையில் நாங்கள் குடும்பத்துடன் 2009-ல் பாஸ்போர்ட் மற்றும் ரூ.50 லட்சம் பணத்துடன் இந்தியா வந்தோம். எங்களின் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை கியூ பிராஞ்ச் அதிகாரிகள் பறித்துக்கொண்டனர். பாஸ்போர்ட்டை திரும்ப கேட்டதற்கு கியூ பிராஞ்ச் அதிகாரி மறுத்துவிட்டார். எங்கள் மீது இந்தியாவில் எந்த வழக்கும் இல்லை. நாங்கள் இலங்கைக்கு செல்ல தயாராக உள்ளோம். என் கணவரை குடும்பத்துடன் தங்கியிருக்க செய்ய வேண்டும் என்றார்.

கியூ பிராஞ்ச் சார்பில் வாதிட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும்போது, மனுதாரரின் கணவரை இண்டர்போல் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இவர்கள் மீது இலங்கையில் வங்கி மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. மனுதாரரின் கணவரை விடுவித்தால் இரு நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும். மனுதாரர் விரும்பினால் திருச்சியில் தங்கியிருந்து சிறப்பு முகாமில் உள்ள தனது கணவரை சந்திக்கலாம் என்றார்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.ரஜினி வாதிடும்போது, இந்தியாவில் மனுதாரர் மற்றும் அவரது கணவர் மீது எந்த வழக்கும் இல்லை. வங்கி மோசடி வழக்கை அவர்கள் சட்டப்படி சந்திப்பார்கள். மனுதாரர் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் உள்ளார். அவரது கணவரையும் அவருடன் தங்கியிருக்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல், மண்டபம் முகாமில் வேலி கிடையாது. அங்கு இருவரையும் தங்க வைத்தால் தப்பிச் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றார்.

மண்டபம் முகாம் கியூ பிராஞ்ச் போலீஸாரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களின் அனுமதியில்லாமல் யாரும் முகாமிற்குள் நுழையவும் முடியாது. வெளியே செல்லவும் முடியாது என உதயகலா தெரிவித்தார்.

இதையடுத்து விசாரணையை மாலைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மண்டபம் முகாம் பாதுகாப்பு தொடர்பாக தகவல்களை ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி மூலமாக கேட்டறிந்தனர். பின்னர் மாலையில் நீதிபதிகள் அறையில் மீண்டும் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்குப் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவரை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து மண்டபம் முகாமிற்கு மாற்ற வேண்டும். மண்டபம் முகாமில் மனைவி, குழந்தைகளுடன் அவர் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பும் வழங்க வேண்டும். மனுதாரரின் கணவருக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கணவனிடம் மனைவி உருக்கம்

இந்த வழக்கு மதியம் ஒத்திவைக்கப்பட்ட போது தயாபரராஜை போலீஸார் சாப்பிட அழைத்தனர். அவர் சாப்பிட மறுப்பு தெரிவித்தார். அப்போது அவர் அருகே வந்த உதயகலா, ‘போய் சாப்பிடுங்கள், சாப்பிடாமல் சாக வேண்டும் என்றால் இங்கு வந்து ஏன் இறக்க வேண்டும், இலங்கை மண்ணிலேயே இறந்திருக்கலாமே என்றார். மேலும் அங்கு நின்றிருந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், ‘நானும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்தான். நான் சாப்பாடு வாங்கித் தருகிறேன். சாப்பிடுங்கள்’ என்றார். இதையடுத்து பிஸ்கெட் சாப்பிட்டார்.

நீதிமன்றத்தில் விசாரணையின்போது, முகாமில் உதயகலா அடிக்கடி உண்ணாவிரதம் இருந்து பிரச்சினை செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘உண்ணாவிரதம் இருப்பது தவறில்லை. மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்’ என்றனர். தயாபரராஜ் கூறும்போது, என்னை எப்படியாவது குடும்பத்துடன் சேர்த்து விடுங்கள். சென்னை புழல் சிறையை விட திருச்சி சிறப்பு முகாம் மோசமாக உள்ளது என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x