Published : 12 Jun 2016 01:26 PM
Last Updated : 12 Jun 2016 01:26 PM

திருப்பூர் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை சம்பவம்: தொழில் துறையினர் தவறாக வழிநடத்தப்படுகிறார்களா?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கணபதிபாளையம் திருமலை நகரில் ஆயத்த ஆடை தொழிலில் ஈடுபட்டிருந்த தாமரைக்கண்ணன் (40), மனைவி பிரபாவதி (35) ஆகியோர், கடந்த வாரம் தங்களது இரண்டு ஆண் குழந்தைகளை கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

வங்கி கடன் விவரம், தொழில் செய்தபோது உடனிருந்த 5 பங்குதாரர்கள் குறித்த பதிவு உட்பட பல்வேறு விவரங்களை கடிதத்தில் தாமரைக்கண்ணன் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தை, பிரதமர் மோடிக்கு மெயில் மூலமாக அனுப்பினாரா என்பது குறித்து பல்லடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொழில் நிமித்தமாக, பல்லடம் - திருப்பூர் சாலை கணபதிபாளையத்திலுள்ள பொதுத் துறை வங்கிக் கிளையில், கடந்த 2005-ம் ஆண்டு தாமரைக்கண்ணன் கணக்கு தொடங்கியுள்ளார். தொழில் ஆவணங்கள், நகை, வாகனங்கள் மூலமாக, கடந்த 2011-ம் ஆண்டில் ரூ.3.5 கோடி கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. கூடுதலாக ரூ.3.44 கோடி பெற, போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததாக இவர் மீது மாநகர குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்து தற்கொலை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வங்கியில் வழங்கப்பட இருந்த கடனும் நிறுத்திவைக்கப்பட்டது.

இவரைப்போல் கடன் நெருக்கடியில் பலர் தவறாக வழிநடத்தப்படுவதால் தற்கொலைக்கு ஆளாகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது:

வருமான வரி செலுத்துவதற்கு பான் எண்ணும், விற்பனை வரிக்கு டின் நம்பரும் அவசியமான ஒன்று. ஆனால், இன்றைக்கு தொழிலில் ஈடுபடாத பலர், ‘பில் டிரேடர்’ என்ற பெயரில் இயங்குகிறார்கள். இதில், பலர் தொழில்துறையில் ஈடுபடுபவர்களுக்கு, லாபத்தை குறைத்துக் காண்பிக்க மறைமுகமாக உதவுகிறார்கள். இதன்மூலமாக அரசுக்கு செலுத்த வேண்டிய வரி குறைகிறது. வங்கித் தரப்பில் கடன் அளிக்கும்போது, ‘டின் நம்பர்’ யாருக்கு சொந்தமானது என்பதை கண்காணிக்க வேண்டும். வங்கியில் கடனுக்கு அளிக்கப்படும் பேரேட்டில் (பேலன்ஸ் சீட்) ஆடிட்டரே கையெழுத்திட்டிருந்தாலும், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆடிட்டரிடம் வங்கித் தரப்பு விசாரிக்க வேண்டும். வங்கியில் கடன்பெறுவோரின் ரிட்டர்னையும் கண்காணித்து கடன் அளிக்க வேண்டும். ஆனால், இதை பெரும்பாலானோர் செய்வதில்லை. இதற்கு, வங்கிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டியும் காரணம்.

திருப்பூர் போன்ற தொழில் நகரத்தில் சுமார் 300 ஆடிட்டர்கள் உள்ளனர். ஆனால், பி.காம். படித்துவிட்டு சி.ஏ. படிப்பை பாதியிலேயே நிறுத்திய பலர், ஆடிட்டராக வலம் வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களிடம் சிக்கும் தொழில்துறையினர் தவறுதலாக வழிநடத்தப்படுகிறார்கள். இவர்களிடம் அரசு சோதனை நடத்தினால், போலி அரசு முத்திரைகள்கூட கைப்பற்றப்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால், அரசு தரப்பு அதை செய்வதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐசிஏஐ திருப்பூர் கிளைத் தலை வர் இரா.அன்பழகன் கூறும்போது, “சி.ஏ. என்று போட்டுக்கொண்டு, அதன் மேல் கோடு போடக்கூடாது. முடித்துவிட்டுதான் சி.ஏ. என குறிப்பிட வேண்டும். ஆனால், இன்றைக்கு பலர் ஆடிட்டர் என்று சொல்வதால், தொழில்துறையினரை தவறாக வழிநடத்த வாய்ப்புகள் அதிகம். இதனால் குளறுபடிகள் அதிகம் நடக்கின்றன” என்றார்.

இதுதொடர்பாக திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழுத் தலைவர் டி.ஆர்.விஜயகுமார் கூறும்போது, “வங்கியில் கடன்பெறுவது உட்பட பல்வேறு விஷயங்களில், பி.காம். முடித்துவிட்டு ஆடிட்டர்கள் என்று போட்டுக்கொள்பவர்களின் பிடியில் தொழில்துறையினர் சிக்கியுள்ளனர். இது முறைப் படுத்தப்பட வேண்டிய ஒன்று. உரிய ஆடிட்டர்களை சந்திக்கவும், இதுபோன்ற பிரச்சினைகளுக் காகவும் தொழில் பாதுகாப்புக் குழுவை எப்போது வேண்டு மானாலும் அணுகலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x