Published : 23 Nov 2014 08:48 AM
Last Updated : 23 Nov 2014 08:48 AM

காவிரியில் அணைகள் கட்டும் கர்நாடகத்துக்கு எதிர்ப்பு: முழு அடைப்பு, பஸ், ரயில் மறியல் டெல்டா மாவட்டங்கள் ஸ்தம்பித்தன

காவிரியில் புதிய அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக டெல்டா மாவட்டங்களில் நேற்று முழு அடைப்பு மற்றும் பஸ், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பல்வேறு கட்சியினர் உட்பட 3,600-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய பகுதிகளில் 2 புதிய அணைகள் கட்டப்போவதாக அறிவித்து, அதற்கான வேலைகளில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதனால், காவிரியில் தற்போது வரும் உபரிநீர்கூட கிடைக்காது என்ற அச்சம் தமிழக விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் அணை கட்டும் முடிவைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று முழு அடைப்பு மற்றும் சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போராட்டத்துக்கு திமுக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உட்பட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள், வெள்ளையன், விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்கங்கள், பல்வேறு விவசாய சங்கங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

3 மாவட்டங்களில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் மருந்துக் கடை, மருத்துவமனை, வங்கி, ஏடிஎம் மையங்கள், உணவகங்கள் தவிர பெரும்பாலான கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிப் போயிருந்தன. போராட்டங்கள் காரணமாக டெல்டா மாவட்டங்கள் ஸ்தம்பித்தன.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகூர் - திருச்சி பயணிகள் வழக்கம்போல நேற்று புறப்பட்டு 100 மீட்டர் சென்ற நிலையில், அதன் 2 பெட்டிகளில் இருந்த மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். போராட்டம் குறித்து பயணிகளிடம் விளக்கிவிட்டு ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.நல்லதுரை தலைமையில் வெளியே காத்திருந்த நாம் தமிழர் கட்சினர், போலீஸ் தடைகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து ரயில் மறியல் செய்தனர். பின்னர், அங்கு வந்த வைகோ உள்ளிட்டோர், பகல் 11.10-க்கு தஞ்சை வரும் திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயிலை மறித்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கீழ்வேளூர் ஆகிய இடங்களில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ், ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள், மதிமுக, தேமுதிக, ஐஜேகே, தமுமுக, மமக, தவ்ஹீத் ஜமாஅத் உட்பட பல்வேறு கட்சியினரும் திரளாகப் பங்கேற்றனர். பல்வேறு இடங்களில் சாலை மறியலும் செய்யப்பட்டது. மயிலாடுதுறையில் வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. 3 மாவட்டங்களிலும் பஸ், ரயில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 3,688 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘ஆறுகளை தேசியமயமாக்க வேண்டும்’ - வைகோ

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 9 மணி முதலே பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ரயில் நிலையம் முன்பு குவியத் தொடங்கினர். போலீஸார் ரயில் நிலைய நுழைவு வாயிலை இரும்புத் தடுப்பு களைக் கொண்டு அடைத்து, அரண் அமைத்து நின்ற னர். இதனால், பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. கொட்டும் மழையில் நின்று கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி தடைகளைத் தாண்டி உள்ளே நுழைய முயன்றனர். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

போலீஸாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ரயில் மறியலில் ஈடுபட்ட வைகோ பேசியதாவது: ‘காவிரி நடுவர்மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகள், ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் கர்நாடக அரசு இனவாதப் போக்கில் நடந்துகொண்டு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதை, மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது. மத்திய அரசு, உடனடியாக மாநிலங்களுக்கிடையே ஓடும் அனைத்து ஆறுகளையும் தேசியமயமாக்க வேண்டும். இல்லை என்றால், இந்த ஆறுகள், சர்வதேச ஆறுகளாக மாறும் காலம் விரைவில் வரும். இந்தியா சுக்குநூறாக உடைவதையும் யாரும் தடுக்க முடியாது’ என்றார் ஆவேசமாக

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x