Published : 07 Jan 2014 09:14 AM
Last Updated : 07 Jan 2014 09:14 AM
தமிழ்நாடு சுற்றுலா துறை, முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தமிழக சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத் திடலில், 40 -வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் தொடக்க விழா திங்களன்று நடந்தது. இந்த விழாவுக்கு தலைமையேற்று தமிழக சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:
இந்தியளவில், வெளிநாட்டவர் வருகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாடு சுற்றுலா துறை முதல்வரின் முயற்சியால் முதலிடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து 70 நாட்கள் நடைபெற உள்ள 40-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சிக்கு முதல்வர் 75 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளார். பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ள சென்னை மாநகராட்சி அரங்கில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.
பொருட்காட்சியை தொடங்கி வைத்த சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் பா. வளர்மதி, “அரசின் சாதனைகளை அறிந்துக் கொள்வது மட்டுமல்லாமல், அரசின் சலுகைகளை எவ்வளவு சுலபமாக பெறுவது எப்படி என்ற விபரங்களை எல்லாம் ஒரே இடத்தில் பெறக் கூடிய அம்சம் கொண்டுள்ளது
சுற்றுலா பொருட்காட்சி” என்று கூறினார்.
விழாவில், தமிழ்நாடு சுற்றுலா துறையின் முதன்மை செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் ஆ. அருண்மொழி தேவன், ராஜ்யசபா உறுப்பினர் நா. பாலகங்கா, துறைமுகம் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT