Published : 01 Jan 2014 12:00 AM
Last Updated : 01 Jan 2014 12:00 AM

தேச விரோத சக்திகளை ஆதரிக்கும் ஆம் ஆத்மி: இல.கணேசன் குற்றச்சாட்டு

தேச விரோத, பயங்கரவாத சக்திகளுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: டெல்லியில் தேர்தலுக்கு முன்பு எந்த காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றார்களோ, இப்போது அதே காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது தார்மீக நெறிகளுக்கு எதிரானது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று கூறுகிறார்கள்.வெடிகுண்டு கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்கள், தேச விரோத, பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் நிறைந்த கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது.

காஷ்மீர் தனி நாடு கோரிக்கை சரிதான் என்றும், அதற்காக காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறுபவர்கள் அந்தக் கட்சியில் பொறுப்புகளில் உள்ளனர். மாவோயிஸ்டு களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் ஆதரவானவர்கள் அந்தக் கட்சியின் தலைவர்களாக உள்ளனர்.

இந்திய ராணுவத்துக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியவர் கேஜ்ரிவால். தமிழ்நாட்டில் இடிந்தகரை உதயகுமாருக்கு ஆதரவாக கேஜ்ரிவால் செயல்படுகிறார். ஆக, இப்படிப்பட்டவர்கள்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் எங்கள் கட்சித் தலைவர்கள் பேசிவருகிறார்கள். திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை தமிழ்நாட்டில் நிச்சயம் உருவாக்குவோம்.

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை நள்ளிரவில் திறந்து வைப்பது ஆங்கிலேய அடிமைத் தனத்தின் மிச்ச சொச்சம்.

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்போம் என்றார் இல.கணேசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x