Published : 29 Mar 2014 12:00 AM
Last Updated : 29 Mar 2014 12:00 AM
மக்கள் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம் ஆத்மார்த்தமானது. அதனால்தான் இன்றுவரை அவர் மக்கள் மனங்களில் அழியாப் புகழுடன் வாழ்கிறார். சாமானிய மக்களில் ஒருவராய் வாழ்ந்ததால்தான் அவரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’என்று எல்லோரும் சொந்தம் கொண்டாடினர். பிரச்சார களங்களில் பலரும் தங்க ளது குழந்தைகளுக்கு பெயர் வைக்கச் சொல்வது இயல்பு. எம்.ஜி.ஆர் வந்து பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே 6 வயது வரைக்கும்கூட தங்களது குழந்தைகளுக்கு பெயர் வைக்காமல் காத்திருந்த அவரது பக்தர்களும் அந்தக் காலத்தில் இருந்தார்கள்.
ஒருசமயம் போடி பிரச்சாரத் துக்கு போகும் வழியில், அதிமுக தொண்டரை எதிர்க்கட்சியினர் அரிவாளால் வெட்டியதில் அவரது கை தனியாக தொங் கியது. அதைப்பற்றிகூட கவலைப்
படாமல் எம்.ஜி.ஆரைப் பார்த்ததும், ’தலைவா நீங்கதான் ஜெயிப்பீங்க’என்று தனது வலியை மறந்து குரல் கொடுத்தார். அந்தத் தொண்டனின் கை வெட்டுப்பட்டு தொங்குவதைப் பார்த்து கண் கலங்கிய எம்.ஜி.ஆர்., உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
ஒருமுறை எம்.ஜி.ஆரின் காரை எடுத்துக் கொண்டு அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், மாயவரம் கிட்டப்பா ஆகியோர் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு போனார்கள். பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் கார் நின்றுவிட்டது. எம்.ஜி.ஆரின் காரைப் பார்த்ததும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து அவரைத் தேடி இருக்கிறார்கள். ‘‘எம்.ஜி.ஆர். வரவில்லை. அவர்தான் எங்களை அனுப்பி வைத்தார்’’என்று அண்ணா சொன்னதுதான் தாமதம். மின்னல் வேகத்தில் சில கிலோ மீட்டர் தூரம் ஓடிப்போய் பெட்ரோல் வாங்கி வந்து கொடுத்திருக்கிறார்கள். ‘‘நீங்கள் எங்கள் தலைவருக்குத் தலைவர். உங்களை எப்படி நடுவழியில் விட்டுவிட்டுப் போக முடியும்’’ என்று கேட்டார்களாம் அந்த மக்கள்.
இந்தச் சம்பவத்தைச் சொல்லி அண்ணா பாராட்டியபோது, ’உங்க ளைவிட யாரும் பெரியவர் இல்லை’என்று எம்.ஜி.ஆர். தன்னடக்கத்துடன் சொன்னார். அதற்கு, ‘‘மக்கள் உன்னிடத்தில் வைத்துள்ள அன்புக்கு என்னை ஈடுகட்டாதே’’ என்றார் அண்ணா.
பிரச்சாரத்தின்போது, விவசாயி களின் வீடுகளுக்குச் செல்லும் எம்.ஜி.ஆர்., அவர்கள் கொடுக்கும் கேப்பங்கூழை குடித்து மகிழ்வார். அப்படியொரு தலைவரை தமிழகம் பார்த்ததில்லை. இனி பார்க்கப் போவதும் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, எம்.ஜி.ஆரிடம் கார் டிரைவராக 2 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றிய கோவிந்தன், 1979-ல் சாலை விபத்தில் இறந்துவிட்டார். கோட்டையில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதுமே, பிரேதப் பரிசோதனை முடிந்ததும் கோவிந்தன் உடலில் அதிமுக கொடி போர்த்தி கட்சி அலுவலகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கச் சொன்னார்.
அங்கிருந்து கிருஷ்ணாம் பேட்டை சுடுகாடு வரை நடந்து வந்த எம்.ஜி.ஆர்., அங்கே இறுதிச் சடங்கு முடியும் வரை எல்லோரையும் போல நின்று கொண்டே இருந்தார். தன்னிடம் கார் டிரைவராக இருந்தவருக்கு இப்படியொரு இறுதி மரியாதையை எந்த முதல்வரும் செய்திருக்க முடியாது. ‘கவலைப்படாதே நான் இருக்கிறேன்’ என்று கோவிந்தன் மகன் பாலுவைத் தேற்றியதுடன், கோவிந்தன் மனைவிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உடனடியாக வேலையும் போட்டுக் கொடுத்தார்.
நான் பார்த்த வரையில் எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்து ஒருவர்கூட வெறுங்கையோடு திரும்பியதில்லை. அவரிடம் ’நாளை வா’ என்ற பேச்சுக்கும் இடமிருக்காது. எம்.ஜி.ஆரின் மீது மக்களும், அவர்கள் மீது
எம்.ஜி.ஆரும் வைத்திருந்த பாசத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு நாட்கள் போதாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT