Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM
தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பணிகளையும், அனுமதிக்கப்பட்ட புதிய பணிகளையும் முடிப்பதற்கு ரூ.15 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் ரயில்வே பட்ஜெட்டில் குறைவான நிதி (ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 கோடி முதல் ரூ.1,200 கோடி வரை) ஒதுக்குவதால் இப்பணிகளை முடிக்க 10 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும் என்று தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேக்கு ஆண்டுதோறும் புதிய திட்டங்களுக்கு ரயில்வே பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் அதை நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவதால் அந்த திட்டப்பணிகளை முடிக்க 15 ஆண்டுகள் வரை ஆகும் என்று தெற்கு ரயில்வே உயர் அதிகாரி தெரிவித்தார்.
ரயில்வே பட்ஜெட்டில், புதிய ரயில்பாதை, அகல ரயில் பாதை, இரட்டைப் பாதை, பறக்கும் ரயில்பாதை (எம்.ஆர்.டி.எஸ்), போக்குவரத்து வசதி, ரயில்வே மேம்பாலம்,ரயில்வே சுரங்கப் பாலம், உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை இப்பணிகளுக்கு நிதி குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. கடந்த 2004-2005-ம் ஆண்டு ரூ.412.34 கோடி செலவிடப்பட்டது. இத்தொகை ரூ.2009-2010-ம் ஆண்டில் ரூ.1284.40 கோடியாக அதிகரித்தது. இப்படி ஏறுமுகத்தில் இருந்த நிதி ஒதுக்கீடு 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இறங்குமுகமானது. இதன்காரணமாகவும், கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வாலும், ரயில்வே திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இப்பணிகளை முடிக்க கூடுதல் நிதியை தமிழக எம்.பி.க்களும் வலியுறுத்திப் பெறுவதில்லை என்றும், புதிய திட்டங்களை வாங்கிக் கொடுப்பதாக மட்டும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் என்றும் ரயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதன் காரணமாக செங்கோட்டை – புனலூர், பழனி-பொள்ளாச்சி, போத்தனூர்-பொள்ளாச்சி, பாலக்காடு-பொள்ளாச்சி, மதுரை-போடி, திருவாரூர்-காரைக்குடி/அகஸ்திம்பள்ளி ஆகிய அகல ரயில்பாதை திட்டப்பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.
திண்டிவனம்-திருவண்ணாமலை (செஞ்சி வழியாக), மதுரை-தூத்துக்குடி, பழனி-ஈரோடு, அத்திப்பட்டு-புத்தூர் ஆகிய புதிய வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் நிதி இல்லாததால் இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் கட்டுமானப் பணிகள் அரைகுறையாக நிற்கின்றன.
2003-2004-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட சென்னை கடற்கரை – அத்திப்பட்டு 4-வது வழித்தடப் பணி, 10 ஆண்டுகளாகியும் 10 சதவீத பணிகளே முடிந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையால் விழுப்புரம் – திண்டுக்கல் இரட்டைப் பாதைப் பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. தற்போதைய நிலவரப்படி நிதி ஒதுக்கீட்டைக் கணக்கிட்டால், நடந்து கொண்டிருக்கும் ரயில்வே பணிகளையும், அனுமதிக்கப்பட்ட பணிகளையும் முடிக்க 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
இனிமேலாவது தெற்கு ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு ரயில்வே அமைச்சகத்துக்கு நமது எம்.பி.க்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT