Last Updated : 27 Jun, 2016 08:27 AM

 

Published : 27 Jun 2016 08:27 AM
Last Updated : 27 Jun 2016 08:27 AM

14 மாவட்ட செயலாளர்கள் எழுதியதா? - விஜயகாந்தை விமர்சித்து வெளியான கடிதத்தால் தேமுதிகவில் பரபரப்பு

தேமுதிகவின் 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்தின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து கூறியதுபோல வெளியான கடிதத்தால் தேமுதிகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, தமாகாவுடன் தேமுதிக சேர்ந்து தேர்தலை சந்தித்தது. இந்தக் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக கொள்கை பரப்பு செயலா ளர் வி.சி.சந்திரகுமார், எம்.எல். ஏ.க்களாக இருந்த சி.ஹெச்சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், தேமுதிக துணைத் தலைவர் தேனி முருகேசன் உட்பட 100-க்கும் அதிகமான தேமுதிகவினர் கட்சியை விட்டு விலகி மக்கள் தேமுதிகவை தொடங்கினர்.

தேமுதிக சார்பில் 104 தொகுதி களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். இதை யடுத்து, வேட்பாளர்களுக்கு விஜயகாந்த் பணம் கொடுத்தார். சில வேட்பாளர்கள் பணம் கேட்டு நச்சரித்ததால், கட்சியை கலைத்துவிடுவேன் என்று விஜய காந்த் சொன்னதாகவும் தகவல் கள் வெளியாகின. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒன்றிய, நகர செயலாளர்களுடன் விஜய காந்த் கடந்த ஒரு வார காலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழலில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பேரில் விஜயகாந்தின் நடவடிக்கை யையும், தேமுதிகவின் போக்கை யும் விமர்சிக்கும் வண்ணம் விஜயகாந்த் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு கடிதங் கள் அனுப்பப்பட்டன. இந்த கடிதங்களின் அனுப்புனர் முகவரியில் மக்கள் தேமுதிக தலைவரும், தேமுதிக முன்னாள் கொள்கை பரப்பு செயலாளருமான சந்திரகுமார் பெயர் இருந்தது.

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ் (மேற்கு சென்னை), எஸ்.செந்தில்குமார் (திருச்சி தெற்கு), எஸ்.நித்யா (வேலூர் கிழக்கு), பி.சம்பத்குமார்(நாமக்கல்), வி.சந்திரன் (கிருஷ்ணகிரி), எஸ்.ஆர்.கே.பாலு (திண்டுக்கல் மேற்கு), வி.இளங்கோவன் (தருமபுரி), டி.சிவமுத்துக்குமார் (மதுரை மாநகர்), என்.தினேஷ் குமார் (திருப்பூர் வடக்கு), கே.ஜெயபால்(திருநெல்வேலி கிழக்கு), ஆர்.பாண்டியன் (கோவை வடக்கு), டி.ஜெகநாதன் (கன்னியாகுமரி கிழக்கு), துரை.காமராஜ் (பெரம்பலூர்), க.ராமசாமி (புதுக்கோட்டை) ஆகியோரின் பெயர் அந்த 6 பக்க கடிதத்தில் உள்ளது. ஆனால், அவர்களின் கையெழுத்து எதுவும் இடம்பெறவில்லை.

இந்த கடிதத்தில், “விஜயகாந்த் நன்கொடை வாங்குவதில்லை என்று மேடையில் சொன்னாலும், மாவட்ட செயலாளர்களிடம் பணம் வாங்கப்படுகிறது. தேமுதிக அறக் கட்டளை பணத்தை விஜயகாந்த் தனது சொந்த செலவுக்கு பயன்படுத்துகிறார். தேர்தல், திரைப்படங்கள் தோல்வியடைந்த போதும் விஜயகாந்த் மற்றும் சுதீஷ் குடும்பத்தின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும். தேமுதிகவால் நாங்கள் முன்னேறவில்லை. எனவே கட்சி யை கலைத்துவிடுங்கள்” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக மேற்கு சென்னை மாவட்ட செயலா ளர் ஏ.எம்.காமராஜிடம் கேட்ட போது, “அந்த கடிதம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. விஜயகாந்த் மட்டுமே எனது தலைவர். கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று யாரோ இப்படி செய்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் விளக்கம் அளித்துவிட்டோம். கடிதத்தின் உரையில் சந்திரகுமார் பெயர் இருந்தது. எனவே, அவரது வேலையாக இருக்குமென்று நினைக்கிறேன்” என்றார்.

சந்திரகுமாரின் மக்கள் தேமுதி கவின் ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் நடக்கவுள்ள நிலையில் இப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சந்திரகுமாரிடம் கேட்டபோது, “தேமுதிகவை விட்டு நாங்கள் வந்துவிட்டோம். அவர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை. வேண்டுமென்றே யாரோ எனது பெயரை பயன்படுத்தி இப்படி கடிதம் எழுதியுள்ளனர். ஏ.எம்.காமராஜ் உட்பட அந்த கடிதத்தில் உள்ள நபர்களுடன் நான் நெருங்கி பழகியது கூட இல்லை. எனக்கும் அந்த கடிதத்துக்கும் தொடர்பில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x