Published : 27 Nov 2014 10:40 AM
Last Updated : 27 Nov 2014 10:40 AM
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவுப் பணி யாளர்களில், மது அடிமைகளாகி மீள முடியாமலேயே பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியுடன், திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் சமூக விலக்கம் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மையத்தின் உதவிப் பேராசிரியை அஞ்சலி சந்திரா கள ஆய்வு மேற்கொண்டார். இதன்படி தமிழகத்தில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வரும் அருந்ததியின மக்களின் வாழ்க்கை, உடல்நலம் குறித்து திட்ட ஆய்வாளர் டி.எம். ஆனந்த் உதவியுடன் இந்த கள ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றார் அஞ்சலி சந்திரா.
இதுகுறித்து ‘தி இந்து’-விடம் அவர் கூறியது: கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாநகராட்சிகள் மற்றும் கரூர், நாமக்கல் நகராட்சிகளில் 450 துப் புரவுப்பணியாளர் குடும்பங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாதிய ஒடுக்குமுறை காரணமாக இவர்கள், சாக்கடை மற்றும் பொதுக் கழிப்பிடம் சுத்தம் செய்தல், குப்பை களை சேகரித்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லுதல், குப்பைகளை தரம் பிரித்தல், மருத்துவமனைக் கழிவுகளை அகற்றுதல், பிரேதப் பரிசோதனையின்போது உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இதற்காக எவ்வித பாதுகாப்பு கவசங்களும் அவர்களுக்கு வழங்கப் படுவதில்லை. இதனால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
மேலும் உயிருக்கு ஊறு விளை விக்கும் மலத்தொட்டி சுத்தம் செய்தல், புதை சாக்கடை அடைப்பு நீக்குதல் போன்ற பணிகளிலும் சட்டத்துக்குப் புறம்பாக ஈடுபடுத்தப் படுகின்றனர். இவர்களது குடியிருப்புகளும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அமைக்கப்பட்டு சமூகத்தில் இருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளனர். இந்த குடியிருப்புகள் ‘சக்கிலிய வலசு’ என்ற சாதியின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. 2வாரங்களில் 4 பேர் பலி கோவை, உக்கடம் பகுதியில் கள ஆய்வு நடத்தியபோது, 2 வாரங்களுக்குள் 4 துப்புரவுப் பணியாளர்கள் இறந்துவிட்டதும், அவர்களது உடல்நலம் சீரழிவதற்கு மது அருந்துதல் பிரதானக் காரணமாக இருந்ததும் ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
பெரும்பாலான துப்புரவுத் தொழிலாளர்கள் துர்நாற்றத்தை சகித்துக் கொள்ளவும், அருவருப் பின்றி உணவருந்தவும் தினமும் மது குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். பெண்களில் ஒரு பகுதியினரும் (40 வயதுக்கு அதிகமானோர்) மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். ஓய்வு பெறும் முன்பே மரணம் அன்றாட வருமானத்தில் 60 சதவீதம் அதாவது ரூ. 200 வரை மது குடிப் பதற்காகவே செலவு செய்கின்றனர். இதன் காரணமாக சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, தைராய்டு, மூட்டுத் தேய்மானம், உடல் வலி, முதுகு வலி, தோல் வியாதிகள், சுவாசக் கோளாறுகள், வாய்ப்புற்று, கல்லீரல் மற்றும் கணையம் பாதிப்பு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இது தவிர புகையிலை, குட்கா, பாக்கு மெல்லுதல் ஆகிய பழக்கங்களுக்கும் ஆளாகின்றனர். இதனால் பெரும் பாலும் பணியிலிருந்து ஓய்வு பெறு வதற்கு முன்பே இறந்துவிடுகின்றனர். பள்ளி இடைநிறுத்தம் அருந்ததியின மக்களிடையே பள்ளி இடைநிறுத்தம் மிக அதிகமாக உள்ளது. 60 சதவீதத்துக்கும் அதிக மான ஆண்கள் 8-ம் வகுப்பை தாண்டு வதில்லை. சிறுவயது திருமணங் களால் பெண்கள் பள்ளிப் படிப்பை பாதியிலே கைவிட முக்கியக் காரணமாக உள்ளது. கழிப்பிடம் இல்லை இந்தச் சமூகத்தினரில் 90 சதவீதம் பேருக்கு கழிப்பிட வசதி இல்லை. பொதுக் கழிப்பிடங்கள், திறந்த வெளிகளையே பயன்படுத்துகின்ற னர். பாதுகாப்பான முறையில் பணி யாற்றுவதற்கு இவர்களுக்கு கையுறை, முகக் கவசம், பாதுகாப்பு காலனிகள், தொப்பி, கோட், இயந் திரங்கள் ஆகியன உள்ளாட்சி அமைப்புகளால் சரிவர வழங்கப் படுவதில்லை. பாதுகாப்பான பணிக்கான தேவை களை ஏற்படுத்தித் தருவதுடன் மது அருந்தும் பழக்கத்தில் இருந்து அவர்களை முழுமையாக மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் அஞ்சலி சந்திரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT