Published : 10 Nov 2013 07:36 AM Last Updated : 10 Nov 2013 07:36 AM
ஏற்காடு இடைத்தேர்தல் மனு தாக்கலில் திமுக வேட்பாளருக்கு ஏமாற்றம்
ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி கடிதம் அளித்த நிலையில், அவருக்கு முன்னதாக சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். அதிர்ச்சியடைந்த தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் சிவலிங்கம், தேர்தல் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் சனிக்கிழமை தொடங்கியது. அதன்படி தி.மு.க. வேட்பாளர் மாறன், முதல் நாளில், முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்ய, இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி கடிதம் அளித்தார்.
இதையடுத்து சனிக்கிழமை காலை 10.50 மணிக்கு, வேட்பு மனு தாக்கல் செய்ய தி.மு.க. வேட்பாளர் மாறன், மாவட்டப் பொறுப்பாளர் சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலாளர் கவுதமன், தி.மு.க. தேர்தல் பார்வையாளர் பொன்.முத்துராமன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு வேட்பாளர் மாறன் டெபாசிட் தொகை செலுத்தினார்.
அப்போது, அவருக்கு முன்னதாக சுயேச்சை வேட்பாளரான 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ரசீது போடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்த தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.
'அங்கீகரிக்கப்பட்ட கட்சியான தி.மு.க. வேட்பாளர் மாறன், முதல் வேட்பாளராக மனு தாக்கல் செய்ய இரண்டு நாட்களுக்கு முன்பே அனுமதி கடிதம் கொடுத்திருந்தோம். தேர்தல் விதிமுறைப்படி பகல் 11 மணிக்குதான் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். ஆனால் 11 மணிக்கு முன்னதாகவே, சுயேச்சை வேட்பாளரின் வேட்பு மனு தாக்கல் செய்யும் வகையில், டெபாசிட் பணம் பெற்று ரசீது அளித்து வேட்பு மனு தாக்கல் செய்ய எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது' என்று சிவலிங்கம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார்.
இதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சபாபதி, சுயேச்சை வேட்பாளர் 11.01 மணிக்குதான் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்று பதில் அளித்தார். அப்போது அங்கு வந்த ஏற்காடு இடைத்தேர்தல் கணக்குப் பார்வையாளர் பங்கஜ் ஜிண்டாலிடமும் சிவலிங்கம் முறையிட்டார். பின்னர், மாநில தேர்தல் ஆணையர் பிரவீன் குமாரிடம் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு சிவலிங்கம் புகார் செய்தார்.
இதுகுறித்து தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் சிவலிங்கம் கூறுகையில், தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளனர். இதுசம்பந்தமாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கவுள்ளோம் என்றார்.
WRITE A COMMENT