Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM
பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே செயல்படும் மின் நிலையம் ஜிஎம்ஆர் தொழில் குழுமத்தைச் சேர்ந்த `ஜிஎம்ஆர் பவர் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது.
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO - டாஞ்சேட்கோ) ஜிஎம்ஆர் பவர் கார்ப்பரேஷனிடமிருந்து 1998-ம் ஆண்டிலிருந்து மின்சாரத்தை தேவைக்கேற்ப வாங்கி வருகிறது. ஜிஎம்ஆர் நிறுவனம் விற்பனை செய்யும் மின்சாரம் மிக அதிக விலையாகும். எரிசக்தி விலையை ஒட்டி, ஒரு யூனிட்டுக்கு ரூ.10 லிருந்து 12 வரை கட்டணம் வசூலிக்கிறது.
மின்சாரம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் `திறன் கட்டணம்' (capacity charges) என ஒரு தொகையை “டாஞ்சேட்கோ” ஜிஎம்ஆர் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும், மின்சாரம் கொள்முதல் செய்தால் அதற்கென ஒரு விலையைத் தர வேண்டும் என்று விதிமுறைகளுடன் டாஞ்சேட்கோ- ஜிஎம்ஆர் பவர் நிறுவனம் இடையே 1998-ல் போடப்பட்ட மின்சாரம் வாங்கும் ஒப்பந்தம் (அதாவது `Power Purchase Agreement' அல்லது PPA), கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி முடிவடைந்தது.
இருப்பினும் டாஞ்சேட்கோ ஜிஎம்ஆர் பவர் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி வருகிறது. மின் சந்தையில் இந்நிறுவனத்தைவிட மிகக் குறைந்த விலையில் மின்சாரம் கிடக்கும் பொழுது, ஏற்கெனவே நஷ்டத்தில் தவித்துக்கொண்டிருக்கும் டாஞ்சேட்கோ ஏன் ஜிஎம்ஆர் நிறுவனத்திடமிருந்தே அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கிக்கொண்டிருக்கிறது? PPA ஒப்பந்த காலம் முடிந்த பின்னும் ஜிஎம்ஆர் மின்சாரம் வாங்குதல் யார் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில் நடந்துகொண்டிருக்கிறது என்ற கேள்விகளுக்கு டாஞ்சேட்கோ, ஜிஎம்ஆர் இருவருமே பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
டாஞ்சேட்கோ யாரிடமாவது மின்சாரம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாடு மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும். 2013-14-ம் ஆண்டுக்கு ஜிஎம்ஆரின் மின்சாரத்துக்கு `திறன் கட்டணம்' ரூ.147 கோடியும், வாங்கப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.10.41 என ஆணையம் நிர்ணயித்திருக்கிறது. ஆனால் ஆணையத்தின் இந்த அங்கீகாரம் PPA ஒப்பந்தகாலமான பிப்ரவரி 15 வரையில்தான்.
இருப்பினும் ஜிஎம்ஆர்-ரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்துவருவதற்கு விளக்கம் அளிக்க மறுக்கின்றனர். மார்ச் மாதம் 8-ம் தேதி வரை 2.66 கோடி யூனிட்களை டாஞ்சேட்கோ வாங்கியிருக்கிறது.
இதைப்பற்றி ஜனவரி மாத இறுதியில் கேட்டபோது ஜிஎம்ஆர் பவர் நிறுவனம் `இதை பற்றி இப்பொழுது நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை' என்று பதில் அளித்தது. சில நாட்களுக்கு முன்பு `இப்பொழுதுதான் PPA முற்றுகை பெற்றுவிட்டதே, இப்பொழுது நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்' என்று கேட்டதற்கு அந்நிறுவனம் பதிலே அளிக்கவில்லை. டாஞ்சேட்கோவிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை.
ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு நெருக்கமான சிலரிடம் கேட்டபொழுது ஜிஎம்ஆர் டாஞ்சேட்கோவுடன் PPA ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரியவந்தது. டாஞ்சேட்கோ கூடுதல் விலையில் மின்சாரத்தை வாங்க ஓர் ஒப்பந்தத்தை ஏன் செய்து கொள்ள வேண்டும்? மேலும், இன்று எந்த ஒப்பந்தமும் இல்லை; ஆணையத்தின் அங்கீகாரமும் இல்லை என்ற நிலையில் டாஞ்சேட்கோ ஏன் மின்சாரம் வாங்கி வருகிறது என்ற கேள்விகளுக்கு `எங்களுக்கு தெரியாது' என்று பதிலளித்து விட்டனர்.
ஜிஎம்ஆரை போல, மேலும் மூன்று தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து டாஞ்சேட்கோ மிக அதிக விலையில் மின்சாரம் வாங்கி வருகிறது. பிள்ளைபெருமாள்நல்லூர், சாமல்பட்டி, சமயநல்லூர் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் இந்த மூன்று (வெவ்வேறு) தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் டாஞ்சேட்கோவிற்கு முறையே ரூ. 8.55, 10.18, 10.96 என்று 2013-14 ற்கு ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் சப்ளை செய்து வருகின்றன. இந்த விலைகளுக்கு மேல் முறையே ரூ. 292 கோடி, 108 கோடி, 110 கோடி என திறன் கட்டணத்தை டாஞ்சேட்கோ தர வேண்டும்.
இந்நிறுவனத்தின் மின் ஆலைகள் திரவ மற்றும் வாயு எரிபொருள்களை மூலப்பொருள்களாக கொண்டவை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனங்களுடன் PPA ஒப்பந்தங்கள் கையெழுத்து இட்டபோது, இந்த மூல பொருள்களின் விலைகள் இன்றிருக்கும் அளவுக்கு உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மின்சாரப் பற்றாக்குறையால் தவித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டுக்கு இவற்றின் மின்சாரம் இன்றியமையாததாய் இருந்தது. மேலும் அன்று மின் சந்தை இல்லை.
இன்று மின் சந்தை என்று ஒன்று இருப்பது மட்டுமல்லாமல், நடப்பு ஆண்டு ஜனவரி 1 முதல் தென் மின் தொகுப்பு (grid) இந்தியாவின் ஏனைய நான்கு மண்டல மின் தொகுப்புகளுடன் இணைக் கப்பட்டுவிட்டது. சந்தையிலிருந்து மின்சாரத்தை நியாயமான விலையில் வாங்க முடியும். ஏனெனில், கிழக்கு மண்டல மாநிலங்கள் மின்மிகை பெற்றவை. பொதுவாக அவை மிகக் குறைந்த விலையிலேயே மின்சாரத்தை விற்கின்றனர்.
தென் மின் தொகுப்பு இணைப்பால் இனி தமிழ்நாட்டிற்குள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கு தடைஇன்றி மின்சாரம் பாயலாம் என்ற நிலை வருவதற்கு இன்னும் சில பணிகள் பாக்கி இருக்கிறது என்றாலும், அந்நிலை விரைவில் எட்டப்பட்டுவிடும் என்று மின் தொகுப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இச்சமயத்தில் டாஞ்சேட்கோ- ஜிஎம்ஆருடனும், மற்ற மூன்று மின் தனியார் உற்பத்தி நிறுவனங்களுடனும் PPA ஒப்பந்தங்களை நீடிக்கப்படுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT