Published : 31 Mar 2017 08:05 AM
Last Updated : 31 Mar 2017 08:05 AM
பிரச்சாரத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. களத்தில் நிற்கும் 62 வேட்பாளர்களில் மருது கணேஷ் (திமுக), இ.மதுசூதனன் (அதிமுக புரட்சித் தலைவி அம்மா), டிடிவி தினகரன் (அதிமுக அம்மா), கங்கை அமரன் (பாஜக), ஜெ.தீபா (எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை), ஆர்.லோகநாதன் (மார்க்சிஸ்ட்), மதிவாணன் (தேமுதிக) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் தினகரன் தரப்பினர் தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்பினர் 2 விளக்குகளை கொண்ட மின்கம்பம் சின்னத்தையும் காட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தவறாமல் செயல்படுத்துவேன் என்பது தினகரன் அளிக்கும் முக்கியமான வாக்குறுதி. குடும்ப ஆதிக்கத்தில் இருந்து கட்சியையும் ஆட்சியையும் விடுவிக்கவும், போயஸ் தோட்ட இல்லத்தை மீட்டு நினைவிடமாக்கவும் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஓபிஎஸ் தரப்பில் பிரச்சாரம் செய்கின்றனர்.
உள்ளூர்வாசி என்ற வகையிலும், பிரதான எதிர்க்கட்சியின் தீவிர தொண்டராக இருந்து வேட்பாளரானவர் என்ற முறையிலும் உள்ளூர் பிரச்சினைகள் அனைத்தையும் சுட்டிக்காட்டி அவற்றுக்கு தீர்வு காண முயற்சி எடுப்பேன் என்று மருதுகணேஷ் வாக்குறுதி அளித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தியாக தலையெடுக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்கிறார் கங்கை அமரன். மார்க்சிஸ்ட், தேமுதிக மற்றும் தீபா பேரவை தரப்பில் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பிளவைச் சந்தித்து, கட்சி இப்போது யார் பக்கம் என்றே தெரியாத நிலையில் அதிமுக இக்கட்டான நிலையில் தவிக்கிறது. இதற்கு விடையளிக்கப் போகும் களமாக ஆர்.கே.நகர் தேர்தல் அமைந்திருக்கிறது.
கடந்த 2015-ல் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. அப்போது ஜெயலலிதா ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக போட்டியிடாததால் இந்த வெற்றியை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.
அடுத்து 2016-ல் நடந்த பொதுத் தேர்தலில் ஜெயலலிதா 55.87 சதவீதம் வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் 33.14 சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இருவருக்கும் இடையே உள்ள ஓட்டு வித்தியாசம் 39,545.
கடந்த தேர்தலுக்கு பிறகு கருணாநிதியிடம் இருந்த தலைமைப் பொறுப்பு ஸ்டாலினிடம் மாறியதைத் தவிர திமுகவில் பெரிய மாற்றம் இல்லை. எனவே, திமுக ஓட்டுகளில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. ஆனால், அதிமுகவிலோ ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை சென்றது, எம்எல்ஏக்கள் சிறைவைப்பு, அதிமுக மூன்றாக பிளவு, கட்சி பெயர், சின்னம் முடக்கம் என பல மாற்றங்களை சந்தித்துள்ளது. இவை அனைத்தும் திமுகவுக்கே சாதகமாக முடியும்.
கள நிலவரம்
திமுக வேட்பாளர் மருது கணேஷ், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர் செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகமாக வரவேற்பதையும் ஆதரவு தெரிவிப்பதையும் காண முடிகிறது. தினகரன் பிரச்சாரம் செய்யும் இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் உள்ளே இருந்தபடியே பாராமுகமாக இருப்பது, சசிகலா தரப்பு மீது மக்களுக்கு உள்ள வெறுப்பை உணர்த்துகிறது. கடைசியாக மருது கணேஷ், மதுசூதனன் ஆகிய இருவர் மட்டுமே களத்தில் முதன்மை இடத்தில் நிற்பவர்களாக உள்ளனர். வாக்கு சதவீதம் மற்றும் கள நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது, இக்கட்டுரை எழுதப்படும் நேரத்தில் வெற்றி வாய்ப்பு திமுகவுக்கே அதிகம் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT