Last Updated : 01 Jun, 2016 12:39 PM

 

Published : 01 Jun 2016 12:39 PM
Last Updated : 01 Jun 2016 12:39 PM

தடைக்காலத்துக்கு பின் திருப்திகரமான மீன்பாடு: தூத்துக்குடி மீனவர்கள் மகிழ்ச்சி

தடைக்காலத்துக்கு பின் திருப்திகரமான மீன்பாடு இருந்ததால் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகம் உள்ளிட்ட நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

கடலுக்கு சென்றனர்

இந்த ஆண்டு 45 நாள் தடைக்காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அதிகாலை 4 மணியளவில் விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கடலுக்கு புறப்பட்டு சென்றன. இங்கு மொத்தமுள்ள 248 விசைப்படகுகளில் 201 படகுகள் முதல் நாளில் கடலுக்கு சென்றன. அதுபோல் வேம்பாரில் மொத்தமுள்ள 25 விசைப்படகுகளும், தருவைகுளத்தில் மொத்தமுள்ள 139 விசைப்படகுகளில் 50 படகுகளும் மீன்பிடிக்க சென்றன.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை விசைப்படகுகள் காலையில் கடலுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எனவே, கடலுக்கு சென்ற அனைத்து விசைப்படகுகளும் இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொன்றாக கரை திரும்பின.

களைகட்டிய துறைமுகம்

படகுகளில் இருந்து மீன்களை தரம் வாரியாக பிரித்த தொழிலாளர்கள் அவற்றை ஏலம் விட்டனர். மீன்களை வாங்க கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இரவு முழுவதும் மீன்பிடித் துறைமுகம் களைகட்டியிருந்தது.

கடந்த ஆண்டு 45 நாள் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற போது போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், இந்த ஆண்டு முதல் நாளில் திருப்திகரமான மீன்பாடு இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விளா, சீலா, பாறை, ஊழி போன்ற விலை உயர்ந்த மீன்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிக்கியிருந்தன. மேலும், ஓரிரு படகுகளில் பெரிய அளவிலான சிங்கியிறால் மீன்கள் பிடிபட்டிருந்தன. இதனைத் தவிர கோழி தீவனத்துக்கு பயன்படும் கழிவு மீன்கள் டன் கணக்கில் பிடிபட்டிருந்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதல் நாளில் மீன்பாடு திருப்திகரமாக இருந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

நல்ல விலை

தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்.சேவியர் வாஸ் கூறும்போது, ‘இந்த ஆண்டு 45 நாள் தடைக்காலத்துக்கு பின் முதல் நாளில் ஓரளவு மீன்பாடு கிடைத்துள்ளது. ஒருசில படகுகளில் நல்ல அளவுக்கு மீன்பாடு இருந்தது. மற்ற படகுகளிலும் நஷ்டம் இல்லாத அளவுக்கு மீன்கள் கிடைத்திருந்தன. மீன்களும் நல்ல விலைக்கு போனது’ என்றார் அவர்.

மீனவர்கள் திருப்தி

தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் எஸ். சிவக்குமார் கூறும்போது, ‘கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதல் நாளில் ஓரளவுக்கு நல்ல மீன்பாடு இருந்ததாக மீனவர்கள் திருப்தி தெரிவித்தனர். இதனால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2-ம் நாளான நேற்று காலை 182 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x