Published : 21 May 2017 03:15 PM
Last Updated : 21 May 2017 03:15 PM
கோவை தொழில் துறையினர் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வரவேற்றுள்ள போதிலும், குறைந்தபட்ச வரி விதிப்பே சிறு, குறு நிறுவனங்களைப் பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
வரும் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பல்வேறு பொருட்களுக்கான விரி விகிதம் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5 சதவீதம் முதல் அதிகபட்சம் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவர் (கொடிசியா) வி.சுந்தரம்: இன்ஜினீயரிங் பொருட்களுக்கு 18 சதவீதம் என்று கூறப்பட்டாலும், கம்ப்ரசர் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, 18 சதவீதத்துக்குமேல் வரி விதிப்பு கூடாது.
இந்திய தொழில், வர்த்தக சபை கோவை கிளைத் தலைவர் வனிதா மோகன்:
நடுத்தர மக்களும் பயன்படுத்தும் சிறிய ரக கார்கள் மற்றும் வாகன பாதுகாப்புப் பொருட்களுக்கு 28 சதவீதம் வரி விதிப்பது சரியாகாது.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் தலைவர் (காட்மா) எஸ்.ரவிக்குமார்:
இன்ஜினீயரிங் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு 5 முதல் 12 சதவீதம் வரை மட்டுமே வரி விதிக்க வேண்டும். பெரும்பாலான சிறு, குறு உற்பத்தியாளர்களிடம் கணினி வசதி இல்லாததால், ஜி.எஸ்.டி. பதிவு செய்யும் முறைகளை எளிமையாக்க வேண்டும்.
இந்திய தொழில், வர்த்தக சபை முன்னாள் தலைவர் டி.நந்தகுமார்:
ஒரு நாடு, ஒரு வரி விதிப்பு என்ற முறையிலான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வரவேற்கிறோம். எனினும், அந்தந்த மண்டலங்களில் உள்ள தொழில் துறையினரை கலந்தாலோசித்து, உரிய வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும். பம்ப் செட்டுகளுக்கு 12 சதவீதமும், மூலப் பொருட்களுக்கு 18 சதவீதமும் வரி விதிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இதில் நிலவும் குளறுபடிகளைக் களைய வேண்டும்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் (கோப்மா) கே.மணிராஜ்:
இந்தியாவில் 90 சதவீத விவசாயிகள் மோட்டார் பம்ப்செட்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே, உணவுப் பொருட்களைப் போல, அவற்றை உற்பத்தி செய்ய உதவும் பம்ப்செட்களுக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும். அல்லது 5 சதவீதம் மட்டும் வரி விதிக்க வேண்டும். சிறிய உற்பத்தியாளர்களுக்கு கணினி அறிவு குறைவாக இருப்பதுடன், முழு நேர கணக்காளர்களும் இருக்க மாட்டார்கள். எனவே, ஜி.எஸ்.டி. பதிவு தொடர்பாக, சரகம் வாரியாக ஆலோசனை முகாம்கள் நடத்தி, பதிவெண் பெற அதிகாரிகள் உதவ வேண்டும்.
கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்துவெங்கட்ராம்:
கையால் தயாரிக்கப்படும் நகைகள், பொற்கொல்லர் கூலி, தாலி, கொடி உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் நகைகளுக்கு அதிகபட்சமாக 1.25 சதவீதம் வரி மட்டுமே விதிக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு கீழ் வர்த்தகம் செய்வோருக்கும் விலக்கு அளிக்க வேண்டும். நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே உரிமம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ஜே.ஜேம்ஸ்
(டேக்ட்): ஜாப் ஆர்டர் செய்வோருக்கும் 18 சதவீத வரி விதிப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, ஜார் ஆர்டர் மூலமாக தொழில்புரிவோருக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT