Published : 10 Jul 2016 01:18 PM
Last Updated : 10 Jul 2016 01:18 PM

ஓபிசி சான்று கிடைக்காததால் பெற்றோர்கள் அவதி: அரசு இ - சேவை மையங்களில் சேவையை சேர்க்கக் கோரிக்கை

குடும்ப வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட, சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய அரசு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குகிறது. சில நேர்வுகளில் 3 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்குகிறது. அந்த சலுகைகளைப் பெற தமிழக அரசின் வருவாய்த் துறை வழங்கும் ஓபிசி சான்று கட்டாயம். வழக்கமாக ஜாதிச் சாற்று பெறுவது போன்று எளிதல்ல.

பொதுமக்கள் வருவாய்த் துறை மூலம் பெறும் சமூக பாதுகாப்புடத் திட்டங்கள், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, ஜாதிச் சான்று ஆகியவற்றை வழங்குவதற்காக கடந்த 2013-ல் ‘அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்குதல் திட்டம்’ என்ற கருப்பொருளுடன் ‘அம்மா திட்டம்’ தொடங்கப்பட்டு, பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ஓபிசி சான்று வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில்கூட மாம்பலம், தண்டையார்பேட்டை, பெரம்பூர், மயிலாப்பூர், எழும்பூர் ஆகிய வட்டங்களில் நடைபெற்ற அம்மா திட்ட முகாம்களில், சிலர் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காகவும், மத்திய அரசுப் பணிக்கான தேர்வு எழுதுவதற்காகவும் ஓபிசி சான்று கோரி வந்தனர். அங்கு உள்ள வருவாய் பணியாளர்கள் சிலர், அதற்கான விண்ணப்பங்கள் இங்கு இல்லை. நீங்கள் வெளியில்தான் வாங்க வேண்டும். சான்றில் பெரிய முத்திரை இட வேண்டும். நாங்கள் அந்த முத்திரையை கொண்டுவரவில்லை. எந்த அம்மா திட்ட முகாம்களிலும் ஓபிசி சான்று வழங்குவது இல்லை. அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி பெற்றோரை திருப்பி அனுப்பினர்.

இது தொடர்பாக, முகாமுக்கு வந்திருந்த கொடுங்கையூரைச் சேர்ந்த சிவராமன் கூறும்போது, “இந்த முகாமில் அனைத்து சான்றுகளும் ஒரே நாளில் கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. இங்கு ஓபிசி சான்று கேட்டால் இல்லை என்கின்றனர். இந்த அம்மா திட்ட முகாம்கள், அரசு இ - சேவை மையங்கள் உள்ள இடங்களிலேயே நடத்தப்படுகிறது. இ - சேவை மையங்களில் என்ன சேவை உள்ளதோ, அதை மட்டுமே இவர்கள் வழங்குகின்றனர். கிராமப்புறங்களில் நடத்தப்படும் அம்மா திட்ட முகாம்களில் ஜாதிச் சான்று கோரும் விண்ணப்பங்களை பெறுவதே இல்லை. இ - சேவை மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர். அம்மா திட்டமானது இ - சேவை மையத்தை நம்பியே நடத்தப்படுகிறது. இ - சேவை மையத்தில் ஓபிசி சான்று வழங்கும் சேவை இல்லை. அதனால் இவர்கள் வழங்குவது இல்லை. இதனால் அம்மா திட்ட முகாமின் நோக்கமே நிறைவேறாமல் போகிறது. பழையபடியே அதிகாரிகளை தேடிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துகின்றனர். எனவே இ - சேவை மையத்தில், ஓபிசி சான்று வழங்கும் சேவையை கொண்டுவர வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக அரசு இ - சேவை மையங்களை நடத்தி வரும் அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, “அந்தந்தத் துறைகளில் உள்ள சேவைகளை எளிமைப்படுத்தி, மின்னாளுமை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது. அவ்வாறு கொண்டுவரப்படும் சேவைகள் தான் அரசு இ - சேவை மையங்க ளில் வழங்கப்படுகிறது.

மேலும் பல்வேறு சேவைகளை வழங்க அரசு முயற்சி மேற் கொண்டு வருகிறது. இ- சேவை மையங்களில் தற்போது அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வழங்கப்படும் பிறப்பு, இறப்புச் சான்றுகளை பெறும் சேவை சேர்க்கப்பட்டு உள்ளது. அதேபோன்று பிற்காலத்தில் ஓபிசி சான்று வழங்கும் சேவையும் சேர்க்கப்படலாம். ஆனால் அந்த சேவையை நாங்கள் பயன்படுத்த, உரிய மென்பொருளை உருவாக்கி, மின்னாளுமை திட்ட இயக்குநரகம் அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக மின்னாளுமை திட்ட இயக்குநர் எஸ்.நாகராஜனிடம் கேட்டபோது, “இ-சேவை மையங் களில் வழங்கப்படும் சேவைகள் பட்டியலில், ஓபிசி சான்று வழங்கும் சேவையும் சேர்க்கப்படும்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x