Published : 17 Mar 2017 10:48 AM
Last Updated : 17 Mar 2017 10:48 AM
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தொடர்ந்து டெங்கு, மர்ம காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகும் ராணுவ கிராம மக்களை பாதுகாக்க, கிராமத்தில் மருத்துவ முகாம், ஒட்டுமொத்த துப்புரவுப் பணி முகாம் நடத்தவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிராம மக்களிடம் உள்ளது.
வத்தலகுண்டு அருகேயுள்ளது மேலக்கோயில்பட்டி. 300 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. குடும்பத்தில் ஒருவராவது ராணுவத்தில் இருப்பது இந்த ஊரின் தனிச்சிறப்பு. இதனால் ராணுவ கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலக்கோயில்பட்டியில் அதிகபட்சமாக ஒரே குடும்பத்தில் தந்தை, மகன் ஆகிய இருவரும் ராணுவத்தில் பணிபுரிகின்றனர்.
ஆனால், நாட்டைக் காக்க சென்றவர்களின் குடும்பங்களில் இன்று வீட்டுக்கு ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இக்கிராமத்தில் ஒரு மாதத்துக்கு முன் ஒரு சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து பலர் பாதிக்கப்பட்டனர். இதில் 3 வயது முதல் 10 வயதுள்ள குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இக்கிராமத்தில் குடிநீர் குழாய்கள் வீட்டின் முன் பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. கிராமத்தில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால், திறந்தவெளி கழிப்பிடமும் உள்ளது. இந்த கிராமத்தில் முதலில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டவுடன் சுகாதாரத்துறை சார்பில் கொசு மருந்து அடிப்பது, வீடுகளில் நீண்டநாள் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர், தொட்டிகளில் மருந்துகளை ஊற்றுதல் ஆகிய பணிகளை செய்கின்றனர். இருந்தபோதும், கிராமத்தில் காய்ச்சல் பாதிப்பு குறையவில்லை.
இதுகுறித்து மேலக் கோயில்பட்டியைச் சேர்ந்த கென்னடி கூறியதாவது: கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து அனைவரையும் பரிசோதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒட்டுமொத்த துப்புரவுப் பணி முகாமையும் நடத்த வேண்டும் என்றார்.
- கென்னடி
இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகவீரபாண்டியன் கூறியதாவது: மேலக்கோயில்பட்டியில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கிராமச் செவலியர் மூலம் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களை அறிந்து சிகிச்சைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டது.
சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையால் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் கூடுதல் பணியாளர்கள் பணி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கிராமத்தில் மருத்துவமுகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT