Published : 24 Feb 2014 08:40 AM
Last Updated : 24 Feb 2014 08:40 AM
சீமாந்திரா மாநில முதல்வர் பதவி குறித்து காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு கட்டுப்படுவேன்’ என்று மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் சிரஞ்சீவி தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சீமாந்திரா மாநிலத்துக்கு முதல்வர் ஆவேனா எனக் கேட்கிறார்கள். இது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை. யாரும், அது தொடர்பாக என்னிடம் பேசவும் இல்லை. காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன்.
வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் நெருக்கடியானது. காங்கிரஸ் இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. உணவுப் பாதுகாப்பு சட்டம், தகவல் பெறும் உரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட திட்டங்கள் மூலம் மக்களின் நிலை உயர்ந்துள்ளது. எனவே, காங்கிரஸ் மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்கும்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இது சரியான அரசியல் அணுகுமுறையல்ல. நாட்டின் வளர்ச்சி குறித்த பாதையில் மோடி பயணிக்கவில்லை.
கன்னியாகுமரியின் வளர்ச்சிப் பணிக்கு, கடந்த ஆண்டு ரூ.13.50 கோடி ஒதுக்கி, சன்செட் பாயின்ட் முதல் திரிவேணி சங்கமம் வரை நவீன கழிப்பிடங்கள், பேட்டரி கார்கள், வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசு கோரிக்கை வைக்கும் பட்சத்தில், கன்னியாகுமரியில் கேபிள் கார் அமைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த தயாராக இருக்கிறோம். கன்னியாகுமரி எனக்கு மிகவும் பிடித்தமான பகுதி என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT