Last Updated : 21 Mar, 2017 08:34 AM

 

Published : 21 Mar 2017 08:34 AM
Last Updated : 21 Mar 2017 08:34 AM

தமிழகம்போல ஆந்திராவிலும் கடும் வறட்சி: சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு அடியோடு நிறுத்தம்

தமிழகம்போல ஆந்திராவிலும் கடும் வறட்சி நிலவுவதால், கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதிநீரை திறக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு நீர்வரத்தும் அடியோடு நின்றுவிட்டது.

தமிழகத்தில் 1993-ல் வறட்சி ஏற்பட்டபோது சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. அப்போது கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வெட்டி முடிக்கப்படாததால், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி ரயிலில் கிருஷ்ணா நதிநீர் கொண்டுவரப்பட்டது. கால்வாய் வெட்டி முடித்த பிறகு, 1996 முதல் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நீர் சென்னை குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படுகிறது.

வழக்கம்போல, இந்த ஆண்டும் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. ஆனால், ஆந்திராவிலும் கடும் வறட்சி நிலவுதால், கண்டலேறு அணையில் 6.3 டிஎம்சி மட்டுமே நீர்இருப்பு உள்ளது. எனவே, பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீரை திறக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

நீர்த்தேக்கத்தில் குறைந்தபட்ச உயரத்தில் உள்ள வடிகால்வாய்க் கும் கீழ் நீர்மட்டம் இருந்தால் ‘டெட் ஸ்டோரேஜ்’ என்று குறிப்பிடப்படும். இந்த அளவு நீர் இருந்தால், வடிகால்வாய்கள் மூலம் வெளியேற்ற முடியாது. மிகவும் அவசியம் என்றால், பம்ப் செய்து மட்டுமே எடுக்கமுடியும்.

2001-ல் கண்டலேறு அணையில் ‘டெட் ஸ்டோரேஜ்’ நிலை இருந்தபோது மின்மோட்டார் மூலம் பம்ப் செய்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டது. அப்போது, வினாடிக்கு 200 கனஅடி வீதம் பம்ப் செய்தபோது, பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த ஆண்டு அதுபோல வினாடிக்கு 200 கனஅடி நீரை பம்ப் செய்தால் ஆந்திர - தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வரையிலான 152 கி.மீ. தூரத்தில், 100 கி.மீ. தொலைவிலேயே தண்ணீர் தீர்ந்துவிடும் நிலை உள்ளது. எனவே, ஜீரோ பாயின்ட்டில் இருந்து 25.6 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வர வாய்ப்பே இல்லை. கிருஷ்ணா நீர்வரத்து தற்போது அடியோடு நின்றுவிட்டது.

தற்போது கண்டலேறு அணை யில் திறக்கப்படும் தண்ணீர், திருப்பதி, காளஹஸ்தி, வெங்கட கிரி, நெல்லூர் ஆகிய நகரங் களின் குடிநீர் தேவைக்கே போதவில்லை. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி திறந்தால்தான் இந்த நகரங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அணையில் நீர்இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால் வினாடிக்கு 365 கனஅடி நீர் மட்டும் திறக்கப்படுகிறது. இது ஆந்திர மக்களின் தேவைக்கே போதாத நிலையில், சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியை வந்தடைய வாய்ப்பு இல்லை.

ஆந்திர மாநில அதிகாரிகள் கிருஷ்ணா நதிநீரை நிறுத்திவிட்ட தாக சொல்ல முடியாது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் 5 மதகுகளும் திறந்தே வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் வினாடிக்கு 365 கனஅடி நீர் மட்டுமே வெளியேறுகிறது. அணையில் தண்ணீர் இல்லாத தால், சென்னை குடிநீருக்காக தண்ணீர் திறக்க வழியில்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

சென்னையில் வறட்சி ஏற்படும் போதெல்லாம் கிருஷ்ணா நதிநீர் கைகொடுத்து வந்திருக்கிறது. இந்த ஆண்டில் கிருஷ்ணாவும் கைவிரிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x