Published : 19 Mar 2014 10:14 PM
Last Updated : 19 Mar 2014 10:14 PM
தமிழகத்தில் பாஜக கூட்டணி அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் என்றும், அது மூன்று மாதங்கள்கூட தாங்காது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் 82-வது பிறந்தநாள் விழா, சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடந்தது.
இவ்விழாவில் இளங்கோவன் பேசும்போது, "தற்போது காமராஜர் ஆட்சியை கொண்டுவரும் காலம் வந்துவிட்டது. அதன் முதல் அத்தியாயமாகத்தான் தனியாக, தைரியமாக நிற்கிறோம்.
இப்போது நமக்கு ஊழல் கட்சிகளை தோளில் சுமக்க வேண்டிய நிலை இல்லை. சோதனையான கட்டத்திலும் காங்கிரஸார் உற்சாகமாக உள்ளனர்.
மின் தட்டுப்பாடுக்கு மத்திய அரசு காரணம் என்கிறார் ஜெயலலிதா. கூடங்குளம் மின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய உதயகுமாரை தமிழக அரசு ஒடுக்கியிருந்தால், 2 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கும்.
மோடி ஒரு புழுதிக் காற்று. அவர் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் சாதி, மதக் கலவரங்கள்தான் ஏற்படும்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி அஸ்திவாரம் இல்லாத கட்டிடம். மூன்று மாதங்கள்கூட அது தாங்காது. விரைவில் இடிந்துவிடும். அந்தக் கூட்டணியிலுள்ள கட்சிகளால் ஒற்றுமையாக, ஒன்றாக சேர முடியாது.
மவுனமாக இருக்கும் மக்கள், காங்கிரஸை வெற்றி பெற வைப்பார்கள். இந்த வெற்றியைத் தொடர்ந்து சென்னை ஜார்ஜ் கோட்டையிலும் காங்கிரஸ் கொடி பறக்கும்" என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT