Published : 18 Mar 2014 10:10 AM
Last Updated : 18 Mar 2014 10:10 AM
தேர்தல் நேரத்தில் வியாபாரிகள் ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்வது குறித்த விளக்கத்தை தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக் கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், தேர்தல் அதிகாரிகளும் போலீஸாரும் வாகன சோதனை நடத்தி, ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணம், நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை ரூ.10 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் கெடு பிடிகளால் தாங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பதாக வியாபாரிகள் புகார் செய்திருந்தனர். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது, வியாபாரிகள் எவ்வளவு பணம் கொண்டு செல்லலாம் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் துறையினர் திங்கள்கிழமை கூறியதாவது:
பொதுமக்களோ, வியாபாரிகளோ யாராக இருந்தாலும் ரூ.50 ஆயிரத்துக்குள் கொண்டு சென்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. உரிய ஆவணங்களின்றி ரூ50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப் படைத்துவிடுவர்.
ரூ.10 லட்சத்துக்குமேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இருந் தாலும் இல்லாவிட்டாலும் அதுபற்றி வருமான வரித் துறையினருக்கு தகவல் தரப்படும். அந்தத் துறையிலும் பறக்கும் படை உள்ளது. அவர்கள் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்துவர். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் வைத்திருந்தால் சோதனை போடுவது வருமான வரித்துறையின் விதிமுறை ஆகும். தேர்தல் நேரத்திலும் இது பொருந்தும்.
மற்றபடி, ரூ.10 லட்சம் வரை ஆவணங்களின்றி வர்த்தகர்கள் பணம் கொண்டு செல்லலாம் என்று எந்தச் சலுகையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
இவ்வாறு தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT