Published : 10 May 2017 03:34 PM
Last Updated : 10 May 2017 03:34 PM
துப்புரவு தொழிலாளர்கள் தினமும் சேகரிக்கும் குப்பையில் கிடைக்கும் இரும்பு கழிவு பொருட்களில் இருந்து கலாச்சார முக்கியத்தும் வாய்ந்த விலங்குகள், பறவைகள் சிற்பங்களை உருவாக்கி அவற்றை கொண்டு தமிழகத்திலே முதல் முறையாக கலாச்சார பூங்கா அமைக்க மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்லில் கலைநயம் கண்ட தமிழர்கள் காலம் முதல் தற்போது அன்றாடம் வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகள், காகித கழிவுகள், காய்கறி கழிவுகள் இருந்து பள்ளி குழந்தைகள் கலைநயமிக்க அலங்காரப் பொருட்களை உருவாக்குவதை வரைப் பார்த்திருப்போம்.
தற்போது மதுரை மாநகராட்சியில் கண்டமாகும் வாகன உதிரிப்பாகங்கள், துப்புரவு தொழிலாளர்கள் தினமும் சேகரிக்கும் குப்பையில் கிடைக்கும் இரும்பு கழிவுப்பொருட்களில் இருந்து கலைநயமிக்க சிற்பங்களை தயாரிக்கின்றனர். மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதற்கட்டமாக ரூ.200 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் தொடங்கப்படுகிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’க்காக மதுரையை தயார்ப்படுத்தும் வகையில் நகரின் சுற்றுலாத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில்நிலையம், பஸ்நிலையம் மற்றும் பூங்காங்களை அழகுப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
அதற்காக கழிவுப்பொருட்களை சேகரித்தல், அவற்றில் இருந்து பாதிப்பில்லாத கலைநயமிக்க பொருட்களை தயாரித்து, அவற்றை கொண்டு குழந்தைகளை, சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலாச்சாரப் பூங்காக்களை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் குடிநீர் லாரிகள், ஜேசிபி, ஜீப்புகள், குப்பை வண்டிகள், குப்பை அள்ளும் டிரக்குகள் உள்பட 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இவை பழுதடைந்து பயன்பாடில்லாமல் கண்டமாகும்போது மண்ணோடு குப்பையாகி மங்கி வீணாகுகின்றன. இதை தடுத்து அதிலிருந்து கலைநயமிக்க சிற்பங்களை உருவாக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சிற்பியும், சிற்பகலைப் பேராசிரியருமான பி.ஸ்ரீனிவாசன் தலைமையில் சிற்பக்கலை தெரிந்த தொழில் வல்லுநர்கள், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பல்வேறு கலாச்சார சிற்ப தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களாகவும் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு உதவியாக மதுரை மாவட்டத்தை சார்ந்த 15 தனியார் வெல்டர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கடந்த 5 நாளாக மதுரை செல்லூர் மாநகராட்சி வாகன காப்பத்தில் வாகனங்களின் கழிவு உதிரிப்பாகங்கள், தினமும் துப்புரவு தொழிலாளர்கள் சேகரிக்கும் குப்பையில் கிடைத்த கனரக ஆட்டோ மொபைல் கழிவு உதரிப்பாகங்கள், இரும்பு பொருட்களை வீணாக்காமல் அதிலிருந்து கலைநயமிக்க சிற்பங்களை உருவாக்கி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தின் கலாச்சாரத்தை மையமாக கொண்ட ஜல்லிக்கட்டு காளை சிலை, காந்தி சிலை, மீன் சிலை, சேவல் சிலை, ஆந்தை சிலை, ஒட்டகசிவிங்கி சிலை, மான் சிலை, தாய்சேய் சிலை, ரோபோ சிலை, இருசக்கர வாகன சிலை உள்ளிட்ட இவர்கள் உருவாக்கியுள்ள 16 சிற்பங்கள் ஒவ்வொன்றும் பார்க்க பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
இதில் 15 அடி உயரமுள்ள மதுரை காந்திமியூசியத்தில் இருக்கும் காந்தி சிலை, தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக போற்றப்படும் மதுரை ஜல்லிக்கட்டை பிரதிப்பலிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர் அடங்குவது போன்ற சிற்பங்கள் மனதை கொள்ளை கொள்வதோடு கலைநயத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு சிற்பங்களும் ஆயிரம் டன் எடையில், சிற்பிகள் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர்.
திருப்பதி போன்ற கலாச்சாரப்பூங்கா
மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி கூறுகையில், மாநகராட்சி குடிநீர் வாகனங்கள், குப்பை அள்ளும் வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களில் இருந்தும் வீணாகும் பழைய உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு கழிவுப் பொருட்கள் அதிகமான அளவில் மாநகராட்சி வாகன காப்பகத்தில் சேகரிக்கப்படுகின்றன.
இப்பொருட்களை உபயோகமான முறையில் பயன்படுத்தும் வகையில் இரும்பு கழிவுப்பொருட்களில் இருந்து சிற்பங்கள் செய்யப்படுகிறது. தற்போது முதற்கட்டமாக சுமார் 16 டன் இரும்பு கழிவுகளிலிருந்து, 16 வகை சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான இரும்பு கழிவுகள் மாநகராட்சியில் பயன்படுத்தும் வாகன கழிவுகளில் இருந்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் விஜயவாடா, குண்டுர், திருப்பதி உள்ளிட்ட சில நகரங்களில் ஏற்கனவே இதுபோன்ற பூங்கா நிறுவப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகமான அளவில் கூடும் பூங்காவில் ஒன்று தேர்வு செய்து அந்த இந்த சிற்பங்கள் வைக்கப்பட்டு கலாச்சாரப்பூங்கா அமைக்கப்படுகிறது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT