Published : 25 Sep 2013 08:47 AM
Last Updated : 25 Sep 2013 08:47 AM

ஜெகன் ஜாமீன் சந்தேகத்தைக் கிளப்புகிறது - காங். மீது பாஜக குற்றச்சாட்டு

சி.பி.ஐ.-யை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பதினாறு மாதங்கள் சிறையில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி இப்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். பல மாதங்களாக அவர் மீது 10 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், தற்போது 7 வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று கூறி குற்றங்களைக் குறைத்திருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. இதுகுறித்து, சிபிஐ விளக்கம் அளிக்க வேண்டும்.

தற்போதுள்ள சட்டப்படி விசாரணைக் கைதிகளை அதிகபட்சமாக 90 நாள்கள்தான் சிறையில் வைக்க முடியும். ஆனால், ஜெகன் 16 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது எப்படி? ஜெகன்மோகனுடன், தற்போதைய காங்கிரஸ் அரசின் பல அமைச்சர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அமைச்சர்கள் இன்னமும் கிரண் ரெட்டி அமைச்சரவையில் நீடிப்பது ஏன்? அவர்களது ராஜிநாமா கடிதத்தை ஏற்கத் தாமதிப்பது ஏன்? இதற்கெல்லாம் காங்கிரஸ் பதில் கூற வேண்டும்.

கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணையை முடித்து 4 மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால், ஓராண்டு வழக்கை இழுத்தடித்த சி.பி.ஐ., விசாரணையை அவசர அவசரமாக முடித்துள்ளது. 2004-09-ம் ஆண்டுகளில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் லஞ்ச, ஊழல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆறுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் இன்னமும் சிறையில் உள்ளனர். காங்கிரஸ் இனிமேல் லஞ்சம், ஊழல் பற்றிப் பேச முடியுமா" என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x