Published : 01 Nov 2013 10:51 AM
Last Updated : 01 Nov 2013 10:51 AM
தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்ததால், காற்றாலைகளில் மின் உற்பத்தி கணிசமாக குறைந்திருக்கிறது. அக்டோபர் 30-ம் தேதி வெறும், 190 மெகாவாட் ஆக, உற்பத்தி சரிந்தது.
திருநெல்வேலி, கன்னியா குமரி, தூத்துக்குடி மற்றும் ராமநா தபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இந்த நான்கு மாவட்டங்களிலும், 5,860 காற்றாலைகள் உள்ளன. இவற்றின் மூலம், 3,450 மெகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு சீரான காற்றுவீச்சு இருக்க வேண்டும்.
மாறுபடும் காற்றின் வேகம்
வழக்கமாக, தென்மேற்கு பருவமழை காலமான மே முதல் செப்டம்பர் வரை, காற்றாலை மின் உற்பத்தி அதிகமிருக்கும். வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் காற்றின் வேகம் மிதமாகவும், கோடை காலமான மார்ச் முதல் மே வரை காற்று வீச்சு மிகவும் குறைந்தும் இருக்கும். இதனால், செப்டம்பருக்குப் பின் காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாகக் குறைவது வாடிக்கை. எனினும், இடைப்பட்ட காலங்களில் காற்று வீச்சைப் பொறுத்து, மின் உற்பத்தி ஏற்ற, இறக்கமாக இருக்கும்.
கடந்த ஆண்டு இறுதியில் காற்றுவீச்சு போதிய அளவுக்கு இல்லை. இதனால் காற்றாலைகளில் மின் உற்பத்தி வெகுவாகக் குறைந்தி ருந்தது. இவ்வாண்டு தொடக்கத்தில் காற்றுவீச்சு நிலையாக இருந்ததால் மின் உற்பத்தியும் 1,500 மெகாவாட் என்ற அளவில் சீராகவே இருந்தது.
சரிந்த உற்பத்தி
கடந்த சில நாள்களாகவே காற்றாலை மின் உற்பத்தி அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. கடந்த 25-ம் தேதி இந்நான்கு மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில், மின் உற்பத்தி அதிகபட்சம் 1,001 மெகாவாட், குறைந்தபட்சம் 17 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. அடுத்த நாள் 26-ம் தேதி அதிகபட்சம் 1,387 மெகாவாட், குறைந்தபட்சம் 67 மெகாவாட், 27-ம் தேதி அதிகபட்சம் 1,057 மெகாவாட், குறைந்தபட்சம் 147 மெகாவாட், 28-ம் தேதி அதிகபட்சம் 1,365 மெகாவாட், குறைந்தபட்சம் 79 மெகாவாட் என்ற அளவில் மின் உற்பத்தி இருந்தது.
190 மெகாவாட் மட்டுமே
29-ம் தேதி அதிகபட்சம் 426 மெகாவாட், குறைந்தபட்சம் 17 மெகாவாட் என்ற அளவிலும், 30-ம் தேதி அதிகபட்சம் 190 மெகாவாட், குறைந்தபட்சம் 5 மெகாவாட் என்ற அளவிலேயே மின் உற்பத்தி இருந்தது. வியாழக்கிழமை (அக்.31) காலை நிலவரப்படி அதிகபட்சமே 1 மெகாவாட் என்ற அளவிலேயே மின் உற்பத்தி இருந்ததாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அளவுக்கு மின் உற்பத்தி அதல பாதாளத்துக்கு சென்றதால் மின்பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதி காற்றாலைகளிலும் மின் உற்பத்தி குறைந்து வருகிறது. போதாத குறைக்கு, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் பழுதுகளும் மின்தடை அளவை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT