Published : 16 Jun 2017 12:14 PM
Last Updated : 16 Jun 2017 12:14 PM
திருநெல்வேலி, ராஜவல்லிபுரத்தில் விவசாயிகள் தங்களுக் குள் வரி பிரித்து குளத்தை தூர்வாரும் பணியில் களம் இறங்கியுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் வறட்சியால் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பெரும் பாலான குளங்களில் தண்ணீர் பெருகவில்லை. சீமைக்கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்து காடு போல் குளங்கள் மாறி விட்டன. இத னால் வேதனையடைந்த விவசாயி கள். குளங்களை தூர்வாரி செப்ப னிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் கைவிரிப்பு
கடந்த சில வாரங்களுக்குமுன் திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளங்களை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இப்பணிகள் சரிவர மேற் கொள்ளப்படவில்லை எனவும், எந்தெந்த குளங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது என்ற விவரம் கூட விவசாயிகள் தெரிவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மழைக் காலத்துக்குமுன் குளங்களை சீரமைத்து தயார் நிலையில் வைத்தால் தான், தண்ணீர் பெருகி சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் நம்புகின்றனர். இதற்காக, தங்கள் பகுதியிலுள்ள குளங்களை தூர்வார வேண்டும் என்று அரசிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தாலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் பல குளங்கள் வரவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைவிரிக்கின்றனர்.
களம் இறங்கிய விவசாயிகள்
அரசை நம்பி காத்திருக்காமல் தாங்களாகவே, குளங்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளார்கள். மாவட்டத்திலுள்ள பெரிய குளங்களில் ஒன்றான ராஜவல்லிபுரம் குளத்தில் தூர்வாரும் பணிகளை அப்பகுதி விவசாயிகளே தங்கள் சொந்த செலவில் மேற்கொண்டுள்ளனர். இதற்கு ஆகும் செலவை விவசாயிகள் தங்களுக்குள் வரி பிரித்து ஈடுகட்டுகின்றனர். இப்பணிகள் கடந்த 4 நாட்களாக முழுவீச்சில் நடைபெறுகிறது.
குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் காடுபோல் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் இயந்திரம் மூலம் அகற்றப்படுகின்றன. இதன்மூலம் குளத்தில் அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்க வழி ஏற்பட்டிருக்கிறது.
2 ஆயிரம் ஏக்கர் பயன்
இப்பகுதி விவசாயிகள் கூறும் போது, ‘‘நெல்லை டவுனிலுள்ள நயினார்குளத்தைப்போல், மிகப்பெரிதாக உள்ள ராஜவல்லிபுரம் குளத்தில் பெருகும் தண்ணீர் மூலம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் நெல், வாழை விவசாயம் நடைபெற்று வந்தது. இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இந்த குளம்தான் வாழ்வாதாரம்.
சுத்தமல்லி தடுப்பணையி லிருந்து வரும் திருநெல்வேலி கால்வாய் மூலம் இந்த குளத்தில் தண்ணீர் பெருகும். இந்த தண்ணீரைக் கொண்டு கார், பிசானம் என்று இருபோக சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் பிசான சாகுபடியை மேற்கொள்வதே விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக சுத்தமாக குளத்துக்கு தண்ணீர் வரவில்லை. மொத்த சாகுபடியும் பாதிக்கப்பட்டு விட்டது.
விவசாயிகள் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்த வேண்டிய நிலைதான் உள்ளது. சிலர் ஊரக வேலை உறுதி திட்டத்தில் கால்வாய் மராமத்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பலர் விவசாய பணிகள் இல்லாமல் வீடுகளிலேயே முடங்கியிருக்கிறார்கள்.
வரி பிரித்து பணி
ராஜவல்லிபுரம் குளத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை மேற்கொண்டிருக்கிறோம். இப்பகுதியிலுள்ள கோயில் கொடை விழாவுக்காக பிரித்த வரியிலிருந்து ஒரு பகுதியையும், விவசாயிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட தொகையையும் சேர்த்து குளம் தூர்வாரும் பணிக்கு செலவிடுகிறோம். குளத்தை தூர்வாருமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக எங்கள் சொந்த நிதியில் குளத்தை சீரமைக்கிறோம்.
பருவமழை பொழிந்து பாபநாசம் அணையில் நீர் பெருகும்போது, சுத்தமல்லி தடுப்பணைக்கு அதிகளவில் தண்ணீர் வரும். இதன்மூலம் திருநெல்வேலி கால்வாயில் தண்ணீர் வழிந்தோடி ராஜவல்லிபுரம் குளத்தை நிரப்பும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்’’ என்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் தனியார் மூலம் குளங்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ராஜவல்லிபுரத்தில் விவசாயிகளே தங்களுக்குள் வரிபிரித்து குளத்தை தூர்வாருவது முன்மாதிரியாக விளங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT