Published : 28 Jan 2014 07:24 PM
Last Updated : 28 Jan 2014 07:24 PM
சுவாமி விவேகானந்தரின் கோட்பாடுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஒடிசா வங்கி ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உதகை வந்தார்.
சுவாமி விவேகானந்தரின் 150-வது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாள் இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விவேகானந்தரின் கோட்பாடுகளை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் உமேஷ் சந்திர பாண்டா (53). ஒடிசாவில் இந்தியன் வங்கியில் பணிபுரியும் இவர், அங்குள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் ‘விவேகானந்தா விஷ்வ சேத்தன அபியான்’ என்ற அமைப்பின் செயலாளராக உள்ளார்.
இதே கருத்துகளை வலியுறுத்தி, இருசக்கர வாகனத்தில் கடந்த 12-ம் தேதி முதல் தென் மாநிலங்களில் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். ஒடிசாவிலிருந்து ஆந்திரா, தமிழகம் வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை உதகை வந்தார். உதகையிலுள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்களை சந்தித்து, விவேகானந்தரின் கோட்பாடுகளை வலியுறுத்தினார்.
பின்னர் அவர் பேசுகையில், தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறேன்.
கடந்த 12-ம் தேதி ஒடிசா மாநிலம் சம்பல்பூரிலிருந்து துவங்கி, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி, சூலூர்பேட்டை வழியாக தமிழகத்தின் திருச்சியை வந்தடைந்தேன். அங்கிருந்து கன்னியாகுமரி, கேரள மாநிலம் திருவனந்தபுரம், கோட்டயம், தாளடி, பாலக்காடு வழியாக உதகை வந்தடைந்தேன். பெங்களூரு சென்று அங்கிருந்து சம்பல்பூர் செல்கிறேன்.
‘மனிதன் உலகின் இச்சைகளுக்கு அடிமையாகாமல் உள்ளார்ந்த அமைதியை தேட வேண்டும்’ என விவேகானந்தர் கூறியதை மக்களிடம் பரப்புவதே எனது லட்சியம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT