Published : 20 Nov 2014 08:50 AM
Last Updated : 20 Nov 2014 08:50 AM
தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர் களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்ப தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2003-ம் ஆண்டு மார்ச் மாதத் துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.
இந்தத் தொகையானது மத்திய அரசின், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் டெபாசிட் செய்யப்படும். ஆணையம் அந்த நிதியை பங்குச்சந்தை உள்ளிட்டவைகளில் முதலீடு செய்யும். சம்பந்தப்பட்ட பணியாளர்கள் ஓய்வுபெறும்போது இந்த சேமிப்பு நிதியிலிருந்து 40 சதவீதம் உடனடி ஓய்வூதியமாக வழங்கப்படும். எஞ்சிய 60 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இது இல்லாமல், விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு 20 சதவீத தொகையானது உடனடியாக வழங்கப்படும். எஞ்சிய 80 சதவீதம் அந்த ஊழியரின் 58 வயது பூர்த்திக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். இவை அனைத்தும் திட்டம் சார்ந்த அரசின் அறிவிப்புகள். இந்தத் திட்டமானது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்ற யாருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதுதான் திகைக்க வைக்கும் செய்தி.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் பேசிய அரசு ஊழியர்கள் சிலர் கூறுகையில், “திருத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தில் சொல்லப்பட்ட விதிகள் எதையும் தமிழக அரசு பின்பற்றவில்லை. இந்தத் திட்டத்தில் தேசிய அளவில் சுமார் 39 லட்சத்து 55 ஆயிரம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக் கிறார்கள். இவர்களிடமிருந்து 49 ஆயிரத்து 474 கோடி ரூபாய் பிடித் தம் செய்யப்பட்டு ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 2000 கோடி ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நிலவரப்படி, ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தப்படவில்லை.
2006-க்கு பிறகு தொகுப்பூதியத்தில் இருந்து ரெகுலர் பணியில் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்றுவிட்டார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். இவர்கள் யாருக்கும் இதுவரை ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை’’ என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் துரைப் பாண்டியனிடம் கேட்டபோது, “தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு எந்தவித ஓய்வூதிய பலன்களையும் இதுவரை வழங்காமல் வைத்திருக்கிறது. இதனால் பணிக் காலத்தில் இறந்துபோன ஆசிரியர்கள், போலீஸார், அரசு ஊழியர்கள் என சுமார் 440 பேரின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி மேலாளரை தமிழக அரசு உடனடியாக அறிவித்திருக்க வேண்டும். அந்த நிதி மேலாளர்தான் ஓய்வூதிய நிதியை உரிய இடத்தில் முதலீடு செய்யமுடியும். அப்படி நியமிக்காததால் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப் பணத்தை அரசு டேட்டா சென்டரிலேயே வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு சட்டம் போட்டார்களே தவிர அதை முறையாக நடைமுறைப்படுத்த வில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT