Published : 29 Mar 2014 09:43 AM
Last Updated : 29 Mar 2014 09:43 AM
தமிழகத்தில் ஏப்.12-ல் நடைபெறும் லோக் அதாலத்தில் 25 லட்சம் வழக்குகளுக்கு தீர்வுகாண திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் அருள் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் மாற்றுமுறை தீர்வுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகளில் ஓரிரு நிமிடங்களில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது.
சென்னையில் அண்மையில் நடந்த தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு நிர்வாகக் குழுக் கூட்டத்தில், ஆண்டுக்கு 2 முறை தேசிய அளவில் லோக்-அதாலத் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நவம்பர் 23-ம் தேதி நடந்த லோக் அதாலத்தில் நாடு முழுவதும் 70 லட்சம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 13 லட்சத்து 77 ஆயிரத்து 250 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.1140 கோடி நிவாரணம் கிடைக்க வழி செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஏப். 12-ம் தேதி நடைபெறும் லோக் அதாலத்தில் 880 நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறும். சென்னை உயர் நீதிமன்றத்தில் 1500 வழக்குகளும் மதுரை கிளையில் 800 வழக்குகளும் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
இந்த லோக் அதாலத்தில் 25 லட்சம் வழக்குகளுக்கு தீர்வுகாண திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நான்கில் ஒரு பங்கு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பவை. மற்றவை நீதிமன்றத்துக்கு வராத வழக்குகள் என்றார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (நிர்வாகம்) ஆர்.ராஜசேகர், சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் டி.வெங்கடகிருஷ்ணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் ஜெசிந்தா மார்டின் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT