Published : 01 Jul 2015 10:27 AM
Last Updated : 01 Jul 2015 10:27 AM

ஹெல்மெட் காலக் கெடுவை நீட்டிக்க பொதுமக்கள் கோரிக்கை

உயர் நீதிமன்றம் வழங்கிய கெடு முடிந்து இன்று முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகிறது.

இதனால் நேற்று சென்னையில் உள்ள பல ஹெல் மெட் விற்பனைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில் ஹெல்மெட் இருப்பு இல்லை எனக்கூறி வாடிக்கை யாளர்களை திருப்பி அனுப்பினர்.

கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் கூறும்போது, மாதக் கடைசி நாள் என்பதால் கையில் காசு இல்லை. கடந்த மாதம் ரூ.350-க்கு விற்பனையான ஹெல்மெட் இப்போது ரூ.ஆயிரம் என்கிறார்கள். அதுவும் நல்ல தரமான ஹெல்மெட்கள் கிடைக்க வில்லை.

ஹெல்மெட் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு உள்ளது. இதனால் அரசும், நீதிமன்றமும் நிலைமையை கவனத்தில் கொண்டு கொஞ்சம் கருணை காட்டி காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். மேலும், அரசு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தரமான ஹெல்மெட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஹெல்மெட் கடை வைத்துள்ள சாகுல் ஹமீது ‘தி இந்து’விடம் கூறியதாவது:

20 வருஷம் இந்த தொழில் செய்து வருகிறேன். இப்போது போல் வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதியதில்லை. அதற்குக் காரணம் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்கிற உத்தரவு காரணமாக இருக்கலாம்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் விநியோகஸ்தர்கள், தயாரிப்பு நிறுவனங்களிடம் கொடுத்த புதிய ஆர்டருக்கு இதுவரை சப்ளை செய்யவில்லை. தமிழகம் முழுக்க டிமாண்ட் இருப்பதால் அவர்களால் சப்ளை செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளனர். பக்கத்து மாநிலங்களில் உள்ள ஹெல்மெட் டீலர்களிடமிருந்து தருவித்து ஓரளவு தேவையை சமாளித்தோம்.

அந்த டீலர்களும் சில்லறை விற்பனையாளர்களுக்கான லாபத்தை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைத்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல் அவசர அவசரமாக இங்கு கொண்டு வந்து சேர்க்க மிகக் கூடுதலாக சரக்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இதுபோன்ற காரணங்களால் ஹெல்மெட் விலை அதிகரித்தது’’ என்றார்.

அண்ணா சாலையில் உள்ள சில கடைகளில் விற்பனையாகாமல் கிடந்த ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத அழுக்கடைந்த பழைய ஹெல்மெட்களைக்கூட சுத்தம் செய்து விற்பனை செய்தனர். ”ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டை அணியக் கூடாதே” என ஒரு வாடிக்கையாளர் கேட்டதற்கு, ”இதையெல்லாம் போலீஸ் உன்னிப்பாக கண்டுக்க மாட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரம் போனா இதுவும் கிடைக்காது” என சாதுர்யமாக பேசி விற்பனை செய்தனர் அந்த கடைக்காரர்கள்.

ஹெல்மெட் விற்பனை கடைசி நேர காட்சிகள்

ஹெல்மெட் அணியாமல் இன்றுமுதல் இருசக்கர வாகனங்களில் பயணிக்க முடியாது என்பதால் கடைசி நாளான நேற்று ஹெல்மெட் வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது. அப்போது கண்ட சில காட்சிகள்:

* ஹெல்மெட் வாங்குவதற்காக அண்ணாசாலையில் உள்ள கடைகளில் காலை 9 மணிக்கே மக்கள் கூட்டம் கூடிவிட்டது. வழக்கமாக 10 மணிக்குத் திறக்கப்படும் கடைகள், மக்கள் கூட்டம் பெருகுவதைக் கண்டு முன்னதாகவே திறக்கப்பட்டன.

* தேடிப் பார்த்து வாங்குவதற்கெல்லாம் நேரமின்றி, ஏதாவது ஒரு மாடலை எடுத்து, கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு, வெளியே வர முடியாமல் கூட்டத்தில் முட்டி மோதியபடி கடையை விட்டு மக்கள் வெளியேறினர்.

* கடைசி தினம் என்பதால், வழக்கமாய் ரூ.400, ரூ.500 விலைகளில் விற்ற ஹெல்மெட், நேற்று ரூ.700, ரூ.800 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக மக்கள் கூறினர்.

* இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, உடன் பயணிப்போரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்பதால், சிலர் இரண்டு, மூன்று ஹெல்மெட்களை வாங்கிச் சென்றதையும் பார்க்க முடிந்தது.

* ஹெல்மெட் அனைத்துமே பெரியவர்கள் பயன்படுத்தும் வகையில் இருப்பதால், இரு சக்கர வாகனத்தில் உடன் பயணிக்கும் குழந்தைகளுக்கேற்ப சிறிய வகை ஹெல்மெட்களை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டுமென்பதும் பொதுமக்களின் விருப்பமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x