Published : 29 May 2017 09:36 AM
Last Updated : 29 May 2017 09:36 AM
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் தனது சொந்த செலவில் குளங்கள், கால்வாய்களைத் தூர்வாரும் பணியை சத்தமில்லாமல் செய்துகொண்டு இருக்கிறார், இத்தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.வசந்தகுமார்.
நீர்நிலைகளைப் புனரமைத்து, மழைக் காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டியதன் அவசியத்தை தற்போதைய வறட்சி உணர்த்தியிருக்கிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியை அரசுசெயல்படுத்தி வருகிறது. குளங்களைத் தூர்வாரும் பணியில் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.
இவற்றை எல்லாம் தாண்டி, தனது சொந்த நிதியை செலவழித்து குளங்கள், கால்வாய்களைத் தூர்வாரும் பணியை தொய்வில்லாமல் செயல்படுத்தி வருகிறார் வசந்தகுமார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றது. அப்போது, நாங்குநேரி தொகுதியில் இப்பணியில் வசந்தகுமார் களமிறங்கினார். ரூ.29 லட்சத்தில் பொக்லைன் இயந்திரத்தை சொந்தமாக வாங்கினார். பாளையங்கோட்டை சீவலப்பேரி சந்தை பகுதியில் 70 ஹெக்டேர் பரப்பில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கினார். ஏப்ரல் 3-ம் தேதி இப்பணியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தொடங்கிவைத்தார்.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், தான் வாங்கிய பொக்லைன் இயந்திரம் மூலம், நாங்குநேரி தொகுதியில் உள்ள முக்கிய குளங்களைத் தூர்வாரும் பணியில் வசந்தகுமார் களமிறங்கினார். இப்பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார்.
நாங்குநேரி ஒன்றியம் தெற்கு கழுவூர் பெரியகுளம், வடக்கு கழுவூர் பெட்டைகுளம், களக்காடு ஒன்றியம் இடையன்குளம் ஊராட்சி பச்சை ஆலங்குளம், மாணிக்கன் குளம், பாளையங்கோட்டை ஒன்றியம் கான்சாபுரம் ஊராட்சி நொச்சிகுளம், களக்காடு ஒன்றியத்தில் நாகன்குளம் - படலையர்குளம் ஆகியவற்றுக்கான நீர்வரத்து கால்வாய், பாளையங்கோட்டை ஒன்றியம் தருவை கிராமத்தில் பாளையங்கால்வாயில் 26 கி.மீ. தூரம் ஆகியவற்றை தூர்வாரி செப்பனிடும் பணிக்கு மாவட்ட ஆட்சியர் கடந்த 17-ம் தேதி அனுமதி அளித்தார்.
முதல் பணியாக, தெற்கு கழுவூர் பெரியகுளத்தில் தூர்வாரும் பணிதொடங்கி, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். விவசாயி எஸ்.சிவன் கூறும்போது, “இந்த குளத்தின் மூலம் 300 ஏக்கர் பாசன வசதி பெற்றுவந்தது. எனினும், குளம் தூர்ந்து போயிருந்தது. எம்எல்ஏவின் சொந்த செலவில் குளத்தை தூர்வாருவதால் மழைக் காலத்தில் பெருமளவில் தண்ணீர் பெருகும். இதன்மூலம் 2 பருவ சாகுபடியை மேற்கொள்ள முடியும். வெறும் கண்துடைப்பாக இல்லாமல், உருப்படியாக பணிகளைச் செய்கிறார்கள்” என்றார்.
இப்பணிக்கு பொக்லைன் இயந்திரத்துக்கு தினமும் ரூ.2,200-க்கு37 லிட்டர் டீசல் செலவாகிறது. அதை இயக்கும் நபருக்கு தினமும் ரூ.700 ஊதியம் அளிக்கப்படுகிறது. இதை வசந்தகுமார் ஏற்றுக்கொள்கிறார். குளம் தூர்வாரும் பணிகளை நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்ட அவருக்கு, பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். நீர்நிலைகளின் பாதுகாவலர், மனிதநேயர் என்றவாசகங்களுடன் அவரை வரவேற்று பதாகைகளையும் கட்டியிருந்தனர்.
பணிகளைப் பார்வையிட்ட வசந்தகுமார் கூறியதாவது:
‘‘திருநெல்வேலி மாவட்டத்தில் மிகுந்த வறட்சி பகுதியான நாங்குநேரி தொகுதியில் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லாமல் விவசாயிகளும், மக்களும் கண்ணீர் வடிக்கிறார்கள். அரசு ஒருவகையில் பணிகளைச் செய்தாலும், என்னால் முடிந்தவரையில் குளங்கள், கால்வாய்களை மராமத்து செய்யும் பணியை செய்து வருகிறேன்.
தற்போது, 5 குளங்களைத் தூர்வார மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருக்கிறது. இப்பணிகள் முடிவுற்ற பின் மேலும் குளங்களை தூர்வார அனுமதி கேட்கப்படும். தெற்கு கழுவூர் பெரியகுளத்தின் நடுவே 4 அடி ஆழத்துக்கு குட்டை அமைத்திருக்கிறோம். குளம் வற்றினாலும், அதனுள் இருக்கும் இந்த குட்டையில் தேங்கியுள்ள நீர், ஆடு, மாடுகளுக்கு தாகம் தீர்க்க உதவும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT