Last Updated : 30 Jul, 2016 04:40 PM

 

Published : 30 Jul 2016 04:40 PM
Last Updated : 30 Jul 2016 04:40 PM

மதுவுக்கு செலவிடும் தொகையை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மது குடிப்பதற்கு செலவிடும் பணத்தை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்தவர் சக்திவேல் என்ற சாமிவேல். இவரது மனைவி செல்வி ரகானா. இவர்கள் விவகாரத்து பெற்றுள்ளனர். செல்வி ரகானாவுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க சக்திவேலுக்கு நெல்லை குடும்ப நீதிமன்றம் 12.8.2015-ல் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சக்திவேல், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் நான் குடிகாரன், குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்வதாக கூறி விவகாரத்து பெற்றுள்ளார். அவர் சொல்வது சரி தான். குடிப்பதால் எனக்கு வேலையில்லை. இதனால் என்னால் ஜீவனாம்சம் வழங்க முடியாது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது. செல்வியின் வழக்கறிஞர் வாதிடும்போது, சக்திவேல் சென்னையில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிகிறார். ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதற்காக தனக்கு வேலையில்லை என்கிறார். அவருக்கு சொந்த வீடு உள்ளது. காலி நிலமும் உள்ளது. எனவே மாதம் ரூ.4000 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு

மனுதாரரின் மருத்துவ அறிக்கை படிக்கும் போது அவருக்கு குடி மீது அதிக பற்று இருப்பது தெரிகிறது. மனைவியை விட குடியை அதிகம் நேசிக்கிறார். ஆனால் குடிகாரராக இருப்பதால் ஜீவனாம்சம் வழங்க மறுக்க முடியாது. குடிக்கு செலவிடும் பணத்தை மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க பயன்படுத்தலாம். இந்த காலத்தில் மாதம் ரூ.4 ஆயிரம் பெரிய தொகை அல்ல. இப்பணத்தை வைத்து சாதாரண வாழ்க்கையே வாழ முடியும். இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x