Published : 23 Feb 2017 11:42 AM
Last Updated : 23 Feb 2017 11:42 AM

உள்ளாட்சி: நீங்களே, நீங்கள் தேடும் தலைவன்!

உங்கள் முன்பாக இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, நேர்மையான தலைவனைத் தேர்வு செய்வது. இன்னொன்று, நீங்களே நேர்மையான தலைவனாக ஆவது. எது வசதி உங்களுக்கு?

இரண்டுமே எளிமையானதுதான். குறிப்பாக, இளைஞர்கள் அரசியலுக்கு நுழைவதற்கான தலைவாசலே உள்ளாட்சித் தேர்தல்!

சரி, நேர்மையான தலைவனை எவ்வாறு தேர்வு செய்வது? கட்சிகள் பார்க்க வேண்டாம். சாதிகள் பார்க்க வேண்டாம். பிம்ப அரசியல் வேண்டாம். புனித அரசியல் வேண்டாம். தனி நபர் வழிபாடு வேண்டாம். அடைமொழியோடு வருபவர்களை அலட்சியப்படுத்துங்கள். பிரச்சினைகள் எல்லா வற்றையும் ஏதேனும் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு வந்து சரிசெய்துவிடும் என்று காத்திருக்க வேண்டாம். ‘உங்கள் வேட்பாளர் யார்?’ என்று சரியாக அடையாளம் காண்பது மட்டுமே முக்கியம். அவர் உள்ளூர்காரரா? ஓரளவேனும் படித்தவரா? எளிமையானவரா? எளிதாக அணுக முடிகிறதா? குற்றப் பின்னணி இல்லாதவராக இருக்கிறாரா? ஊருக்காக வேலை பார்த்திருக்கிறாரா? இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அக்கறைகொண்டவரா? சாதி பாகுபாடு பார்க்காதவரா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் ‘ஆம்’ எனில் அவரே உங்கள் தேர்வாக இருக்க வேண்டும்.

உள்ளூர் சூழலைப் பொறுத்து இன்னும்கூட கேள்விகள் தோணலாம். மேலும் மேலும் அலசி ஆராயுங்கள். மனசாட்சியுடன் உரையாடுங்கள். மெய்ப் பொருள் காணுங்கள். சசிபெருமாளைப் போலவோ, மதுரை நந்தினியைப் போலவோ, டிராஃபிக் ராமசாமி போலவோ யாராவது இருப்பார்கள்.

அப்படி தேடியும் ஒருவரும் கிடைக்கவில்லையா? சரி, அப்படி எனில் நீங்கள்தான் வேட்பாளர். நீங்கள்தான் தலைவன்!

எத்தனை காலம்தான் தலைவனை வெளியே தேடுவீர்கள். நீங்கள் தேடும் தலைவனாக ஏன் நீங்களே இருக்கக் கூடாது? சின்னம்மா வர வேண்டும், அவர் தம் உறவினர் எல்லாம் வர வேண் டும், தளபதி வர வேண்டும், அய்யா வர வேண் டும். சின்னய்யா வர வேண்டும், ரஜினி வர வேண் டும், விஜயகாந்த் வர வேண்டும், விஜய் வர வேண் டும் என்று எத்தனை காலம்தான் கவர்ச்சி பிம்பங் களை முன்மொழிந்துக்கொண்டும் வழிமொழிந் துக்கொண்டும் வாழ்க்கையைக் கடத்துவீர்கள்.

தமிழகத்தில் பெரும் அரசியல் வெற்றிடம் காத்திருக்கிறது. அங்கே இளைஞர்களாகிய நீங்கள் வர வேண்டாமா? சென்னை வெள்ளத்தின்போதும் கடலூர் வெள்ளத்தின்போதும் வந்தது நீங்கள்தா னே. கவர்ச்சி பிம்பங்கள் இல்லையே. சென்னை மெரினாவிலும், மதுரை தமுக்கத்திலும், கோவை வ.உ.சி. பூங்காவிலும், திருச்சி தென்னூர் சாலை யிலும், நெல்லை பாளையங்கோட்டையிலும் நீங்கள் காட்டியது வீரம் எனில் இப்போது காட்ட வேண்டியது விவேகம்.

‘நீங்கள் விரும்பும் மாற்றங்களை உங்களிடம் இருந்தே தொடங்குங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. நீங்கள் வேறு; உங்கள் ஊர் வேறு அல்ல. மாற்றத்தை உங்கள் மண்ணில் இருந்தும் தொடங்கலாம். இதற்காக மக்களிடமும் மனசாட்சி யிடமும் தவிர யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. அரசியல் பழக அற்புதமான களம் இதுவன்றி வேறில்லை. தவிர, இது வெறுமனே அரசியல் செயல்பாடு மட்டுமல்ல... உங்களை, உங்கள் ஊரை மீட்க நீங்கள் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் உண்மையான ஜனநாயக அறப்போராட்டம் இது. உங்கள் ஊர் உங்கள் கடமை. உங்கள் ஊர் உங்கள் உரிமை.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் மறு அறிவிப்பு வரவிருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி தேர்தல் முடிவுகள் வரை தேதிகளை அறிவிக்க இருக்கிறார்கள். இப்போதே பல்வேறு கிராமங்களில் ஊர் பிரமுகர்கள் சிலர் ‘பஞ்சா யத்துத் தலைவர்’பதவியை விலைக்கு வாங்கி விட்டார்கள் என்று பேச்சுகள் அடிபடுகின்றன. சில கிராமங்களில் கோயிலுக்கு பணம் கட்டிவிட்டு தலைவர் பதவி ஏற்க காத்திருக்கிறார்கள். பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பல கிராமங்களில் ஆதிக்க சாதியினர் அடிமை சாச னம் எழுத தயாராகிவருகிறார்கள். பல கிராமங் களில் ஆற்று நீரை உறிஞ்சக் காத்திருக்கிறார்கள். பல கிராமங்களில் மணலை கொள்ளையடிக்கவும், மலையை விழுங்கவும், விவசாய நிலங்களை பிடுங்கவும் காத்திருக்கிறார்கள். அரசியல் வியாபாரிகள் அவர்கள். உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவதன் மூலம் அவர்கள் எல்லாம் அடியோடு அப்புறப்படுத்தலாம்.

ஒன்று, இரண்டல்ல... நீங்கள் போட்டியிட 12,524 கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவி யிடங்கள் உட்பட 1,19,399 இடங்கள் தயாராக இருக்கின்றன. ‘உள்ளாட்சி... உங்கள் உள்ளங் களின் ஆட்சி’ தொடரின் முதல் பாகத்தை எழுதிய போதே இளைஞர்கள் பலர் உள்ளாட்சித் தேர்தல் களத்தில் போட்டியிட தயாராகிவிட்டார்கள். சென்னை மாநகராட்சி உட்பட பல்வேறு மாநகராட்சிகளிலும் கிராமப் பஞ்சாயத்துகளிலும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் போட்டியிடத் தயாராகிவருகின்றனர். இதனை நமக்கு மின்னஞ்சல் வழியாகவும் அலைபேசி வழியாகவும் தெரிவித்துவருகிறார்கள்.

பலர் கிராமத்துக்கான தேர்தல் அறிக்கையும் தயார் செய்துவிட்டார்கள்.

உங்கள் மண்ணைக் காப்பாற்ற நீங்கள் தயாராவது எப்போது?

- தொடரும்...



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x