Published : 13 Dec 2013 01:05 PM
Last Updated : 13 Dec 2013 01:05 PM
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிற நிகழ்வுகள் கவலை தருகிறது.
ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற போது, நான் நேரடியாக தலையிட்டு இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சகம், இலங்கைக்கான இந்திய தூதர், இந்தியாவிற்கான இலங்கை தூதர், இலங்கையில் உள்ள தமிழ் அமைச்சர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு மீனவர்களை விடுவிக்கிற முயற்சியில் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். இது எல்லாமே மீனவ அமைப்பு தலைவர்களுக்கும் தெரிந்த உண்மை.
சமீபத்தில்கூட ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவ அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்தேன். தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள், இந்திய, தமிழக அதிகாரிகள் மற்றும் இலங்கை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, டிசம்பர் மாதத்திற்குள் இதற்கு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பேரில் இந்திய அரசு எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய அதிகாரிகளை பேச்சுவார்த்தையில் துணை நிற்க அனுப்ப தயார் என்று அறிவித்தது.
தமிழக அரசு டிசம்பர் மாதத்தில் இந்த பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்ததன் அடிப்படையில், உடனடியாக அதற்கான தேதியை குறிப்பிட்டு பேச்சுவார்த்தைக்கு மாநில அரசு தயாராக வேண்டும். இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழக மீனவர் பிரதிநிதிகளை தேர்வு செய்கிறார்கள் என்று அறிகிறேன்.
அதில், மீனவர் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பேசி வருகிற மீனவ சங்க பிரதிநிதிகள் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள் என்று நம்புகிறோம். உடனடியாக தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களின் பேச்சு வார்த்தைக்கான தேதியை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கிற 5 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க உடனடியாக தலையிட வேண்டும் என்று வெளி விவகாரத்துறை அமைச்சகத்திடம் நேற்று முன்தினம் சொல்லியிருக்கிறேன். நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் உள்பட அனைத்து மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT