Published : 14 Mar 2014 01:03 PM
Last Updated : 14 Mar 2014 01:03 PM
‘‘மீண்டும் காங்கிரஸ் - திமுக கூட்டணி உருவாக வேண்டும். பிரதமர் வேட்பாளராக மீரா குமாரை அறிவிக்க வேண்டும்’’ என்று பேராயர் எஸ்ரா சற்குணம் கூறியுள்ளார். நிருபர்களிடம் பேராயர் எஸ்ரா சற்குணம் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக தலைமையில் 2 தலித் கட்சிகள், 2 இஸ்லாமிய கட்சிகள் என்று வலுவான கூட்டணி உருவாகியுள்ளது. இது திமுகவின் சமூகநீதித் தன்மையைக் காட்டுகிறது. எனவே, காங்கிரஸும் திமுகவுடன் இணைந்து மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க வேண்டும்.
சமூகநீதி, இடஒதுக்கீடு பற்றிய தனது நிலைபாட்டை பாஜக இதுவரை வெளியே சொல்லவில்லை. 120 ஆண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறப்படுகிறது. அதுவும் முடிவாகவில்லை.
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு பதிலாக தற்போதைய மக்களவை சபாநாயகர் மீரா குமாரை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். மீரா குமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளுக்கான இந்திய தூதராக இருந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டு காலமாக மக்களவையில் சிலர் மோசமாக நடந்துகொண்டபோதும் அவையை அமைதியாக நடத்தியுள்ளார்.
பிரதமர் பதவிக்கு அவர் பொருத்தமானவர். ராகுல் காந்தி 2019-ல் வேண்டுமானால் பிரதமராக வரட்டும். திமுக தலைவர் கருணாநிதி, விஜயகாந்த், கம்யூனிஸ்ட்கள் என அனைவரும் காங்கிரஸுடன் இணைந்து மீரா குமாரை பிரதமராக்க வேண்டும்.
இவ்வாறு எஸ்ரா சற்குணம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT