Published : 13 Jan 2014 08:06 PM
Last Updated : 13 Jan 2014 08:06 PM
மண் அடுப்புகள் அடிக்கடி சேதமடைந்து விடுவதால் உலோகத்தால் செய்யப்பட்ட விறகு அடுப்புகள் தருமபுரியில் விற்பனைக்கு வந்துள்ளது.
களிமண்ணால் செய்து சூலையில் வைத்து சுடப்பட்ட மண் அடுப்புகள் கிராமப்புறங்களில் பிரபலம். சமையல் எரிவாயு கலாச்சாரம் வந்து விட்ட தற்போதைய சூழலிலும் கூட கிராமங்களில் வீட்டுக்கு ஒரு மண் அடுப்பு இருக்கும். குறிப்பாக பொங்கல் திருவிழாவின்போது பொங்கலிட்டு கொண்டாட ஆண்டுதோறும் புதிய அடுப்பு வாங்குவர். இந்த மண் அடுப்புகள் குறிப்பிட்ட காலத்தில் சேதமாகி விடும் என்பதால் அடிக்கடி அடுப்புகளை வாங்கும் நிலை ஏற்படும். நகரங்களில் கூட ஒருசில வீடுகளில் மண் அடுப்பு வைத்து விறகு மூலம் பொங்கலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நீண்டநாள் உழைக்கும் வகையில் உலோகத்தால் செய்யப்பட்ட விறகு அடுப்புகள் தருமபுரிக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
தருமபுரி - சேலம் சாலையில் சேஷம்பட்டி கூட்டு ரோடு பேருந்து நிறுத்தம் அருகே காவேரி காம்ப்ளக்ஸில் உள்ள கடையில் இந்த மெட்டல் அடுப்பு விற்கப்படுகிறது. இந்த அடுப்பு பற்றி கடை உரிமையாளர் சுப்பிரமணி கூறியது:
பெங்களூருவில் இதுபோன்ற அடுப்புகள் நீண்ட நாட்களாகவே விற்கப்படுகிறது. அங்கே ரூ. 750 வரை இந்த அடுப்புகள் விற்கப்படுகிறது. அங்கே சிறுசிறு பழுதுகளால் ஓரங்கட்டப்பட்ட அடுப்புகளை மொத்த விலை கொடுத்து வாங்கி வருவோம். அதிலுள்ள பழுதுகளை சரிசெய்து விற்பனைக்கு வைத்துள்ளோம். ஒரு அடுப்பின் விலை ரூ. 200 மட்டும் தான். வெப்பத்தை வெளியில் விடாமல் நீண்டநேரம் தக்க வைக்கும் தன்மை கொண்ட உலோகம் என்பதால் வேகமாக சமையலை முடிக்க முடியும். சூடாக இருக்கும் நிலையில் கூட துணி போன்றவற்றின் உதவியின்றி அடுப்பை இடம்மாற்றி வைக்க வசதியாக இதில் கைப்பிடி உள்ளது. மேலும் மழை, வெயில் என எதனாலும் பாதிப்படையாது.
மண் அடுப்புடன் ஒப்பிடும்போது பல ஆண்டுகள் உழைக்கும். தொடர்ந்து எரிப்பதால் சில ஆண்டுகளுக்குப் பின் ஓட்டை ஏற்பட்டு விட்டாலும் பழைய இரும்பாக விற்றால் ரூ.50க்கு குறையாமல் விலை கிடைக்கும். நீண்டகாலம் உழைக்கக் கூடியவை இந்த மெட்டல் அடுப்புகள், என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT