Last Updated : 14 Mar, 2017 11:19 AM

 

Published : 14 Mar 2017 11:19 AM
Last Updated : 14 Mar 2017 11:19 AM

திருச்சி சிறையில் சோப்பு தயாரிப்பு தொழிற்சாலை: தனியாருக்கு நிகரான தரத்தில் உற்பத்தி செய்ய திட்டம் - சிறைவாசிகளுக்கு மட்டுமின்றி வெளிச்சந்தையிலும் விற்க முடிவு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்பு வகைகளை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கைதிகள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு நிகரான தரத்தில் சோப்பு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் விசாரணை, தண்டனை மற்றும் தடுப்புக் காவல் சிறைவாசிகள் என சுமார் 1,400-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மறுவாழ்வுக்கான தொழிற்பயிற்சிகளை அளிப்பதற்காக மாநிலத்திலேயே முதல்முறையாக அரசு சார்பில் ஐ.டி.ஐ. செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இங்கு பிட்டர், கணினி ஆபரேட்டர், எலெக்ட்ரீஷியன், டெய்லரிங், வெல்டர் என 5 பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன.

இவற்றில் 8,10,12-ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே சேர்ந்து பயில முடியும். அதற்கும் குறைவான கல்வித் தகுதிடைய கைதிகளுக்கும், தொழில் வாய்ப்பு அளிப்பதற்காக தையலகம், மண்புழு உரம் தயாரித்தல், நெசவுத் தொழிற்கூடம் போன்றவையும் சிறை வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது நவீன கருவிகளுடன் கூடிய சோப்பு தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கும் பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளியல் சோப்பு, டிடர்ஜென்ட் சோப்பு ஆகிய 2 வகை சோப்புகளை தயாரிப்பதற்காக தனித்தனியாக கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

இவற்றுக்கு தேவையான கெமிக்கல் கலவை இயந்திரம், உலர வைக்கும் இயந்திரம், சம அளவில் நறுக்கும் இயந்திரம், சோப்புகளில் எழுத்துகளை அச்சிடும் இயந்திரம், அவற்றை பேக் செய்யும் இயந்திரம் உள்ளிட்ட கருவிகளை கொள்முதல் செய்ய சிறைத்துறை நிர்வாகத்துக்கு தமிழக அரசு ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இங்கு தயாரிக்கப்பட உள்ள சோப் வகைகள், மாநிலம் முழுவதும் உள்ள சிறைவாசிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, வெளிச்சந்தையிலும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் கூறும்போது, “திருச்சி சிறை வளாகத்தில் ஏற்கெனவே சிறைவாசிகள் மூலம், சாதாரண முறையில் கைகளால் டிடர்ஜென்ட் சோப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதை விரிவுபடுத்தி, தற்போது டிடர்ஜென்ட் மற்றும் குளியல் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்ற சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இங்கு செமி ஆட்டோமெட்டிக் வகையிலான நவீன கருவிகள் பொருத்தப்பட்டு, தனியார் கம்பெனிகளுக்கு நிகரான தரத்தில் குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்பு வகைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. அவை, மாநிலம் முழுவதும் உள்ள சிறை கைதிகளின் பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நவீன கருவிகளை கையாள்வதற்கான பயிற்சிகள் சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும். தொழிற்சாலை கட்டுமான பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x