Published : 16 Nov 2014 05:52 PM
Last Updated : 16 Nov 2014 05:52 PM
எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியாதவர் முதல், உயர் கல்வியின் உயரம் தொட்டவர் வரை அனைவரையும் இருகரம் நீட்டி வரவேற்று, அரவணைத்து வேலைவாய்ப்பு தந்துகொண்டிருக்கும் மாநகரம் திருப்பூர். ஆண்டுக்கு ரூ.33 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் பனியன் நகரம். ‘உழைப்பை மட்டுமே நம்பி, வெறுங்கையோடு வந்தவரையும் காப்பாற்றி உயர்த்தும் நகரம்’ என்ற பெருமையை இன்று வரை காப்பாற்றி வருகிறது திருப்பூர். அவரவர் தகுதி, திறமைக்கேற்ற வேலையும் அதற்கேற்ற சம்பளமும் தரும் நம்பிக்கை நகரம் என்ற பெயரையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது இந்த நகரம். அதேசமயம், வளர்ந்துவரும் மற்ற மாநகரங்களுக்கான வருத்தமூட்டும் அடையாளங்களில் ஒன்றாக இங்கும் குறைவில்லாமல் குற்றங்கள் அரங்கேறுகின்றன.
திருப்பூரில் குற்றங்கள் அதிகரிக்க என்ன காரணம்..? பல்வேறு வகையில் பல லட்சம் கோடி அளவுக்கு மோசடிகள் எப்படி நடக்கின்றன..? நம்பிப் பிழைக்க வருபவர்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள்..? இதுபோன்ற ஒரு சில ‘பொத்தல்கள்’ இந்த பனியன் நகரில் எப்படி ஏற்பட்டிருக்கிறது..? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!
காதர் பாய் முதல்..
1940-ம் வருடவாக்கில் இங்கு சிறிய அளவில் பனியன் விற்றுவந்த காதர் பாய் என்பவர் கல்கத்தாவில் இருந்து ஒரு பின்னலாடை மிஷினை தருவித்து பனியன் நெசவை ஆரம்பித்தார். தொடர்ந்து பலரும் மிஷின் தருவித்து பனியன் உற்பத்தியை உள்ளூர் அளவில் தொடங்கினர். திருப்பூர் டவுன்ஹால் அருகில் உள்ள காதர்பேட்டை அங்காடிகள் அந்த ஆரம்பகால பனியன் வரலாற்றை சொல்கின்றன.
உள்ளூர்வாசிகள் கைகளில் மட்டுமே இருந்த இந்த கடைகள், தென் மாவட்டக்காரர்களின் கைகளையும் அடைந்து... ஆந்திரம், கர்நாடகம் என மற்ற தென்மாநிலத்தவர் ஆதிக்கத்தையும் சேர்த்துக் கொண்டு... இன்று பிஹார், ஒடிசா, மகாராஷ்டிரம், மேற்குவங்கம் என வட மாநிலத்தவர்களும் கோலோச்சும் அளவுக்கு பரந்து விரிந்தது.
கொடுமை என்னவென்றால்... உழைப்பை சுரண்டும் உள்நாட்டு ஆசாமிகள் முதல்... டூரிஸ்ட் விசாவில் வந்து இறங்கிய நைஜீரியர்கள் வரை மோசடி ஆசாமிகளுக்கும் எல்லைகள் அற்ற இந்த வளர்ச்சி உதவியாக மாறிவிட்டது.
உள்நாட்டின் மூலை முடுக்குகள் வரை சென்றுகொண்டிருந்த பனியன் 1980-களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆக ஆரம்பித்தது. தொடக்கத்தில் ஆண்டுக்கு சில நூறு, ஆயிரம் கோடி அளவிலேயே நடந்த அந்நிய வர்த்தகம், 10 ஆண்டுகளில் ஜெட் வேகத்தில் பறந்து 1990-களில் ரூ.10 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணியை ஈட்டத் தொடங்கியது.
பணம்- அதுவும் டாலர்களில் புரண்டதால் ஆசை, பேராசை மட்டுமின்றி கூடவே குற்றங்களும் அதன் கையை பிடித்துக் கொண்டு உலா வரத் தொடங்கின.
தொடங்கிவைத்த ‘7 ஸ்டார்’
ஒன்று கொடுத்தால் ஒரே மாதத்தில் 3 மடங்கு. ஒன்றுக்கு மூன்று மடங்கு ஆட்களை பிடித்துத் தந்தால் கூடுதல் போனஸ் என்று 1985-ல் ஆசை காட்டியது 5 ஸ்டார், 7 ஸ்டார் நிதி நிறுவனங்கள். திருப்பூர் மேட்டுப்பாளையம், பெருமாநல்லூர் சாலையில் கடைவிரித்திருந்த இந்த மோசடி நிறுவனங்களிடம் பல அப்பாவிகளும் ரூ.100 கட்டி ரசீது வாங்கினர். அடுத்த மாதமே ரசீதைக் கொடுத்து ரூ.300 பெற்றார்கள். அதில் அசல் ரூ.100-ஐ எடுத்துக் கொண்டு மீதியையும் நிதி நிறுவனத்திலேயே செலுத்தி ரசீது பெற்றார்கள். மீண்டும் ஒரு மாதம் கழித்து 3 மடங்கு தொகை பெற்றார்கள்.
‘அட.. சொன்னபடியே நியாயமா பணத்தைக் கொடுத்துடறாம்ப்பா’ என்ற நம்பிக்கை பரவியது. ஆசைகள், பேராசைகளாக மாறத் தொடங்கின. நூற்றுக்கணக்கில் போட்டவர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் என்று காடு, தோட்டத்தை விற்று பணம் கட்டினார்கள். பஞ்சாலையில் இருந்த பிஎப் பணத்தை பெற்று பணம் போட்டார்கள். ஒருநாள்! திடீரென்று ஸ்டார் நிறுவனம் மூடல்! கத்திக் கதறி, கண்ணீர் வடித்து என்ன பயன்? திருப்பூர், மேட்டுப்பாளையம், அவினாசி, பெருமா நல்லூர், கருவலூர், பெருந்துறை பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு மேல் என்கிறது போலீஸ் ஆவணம். மோசடியில் சுருட்டப்பட்ட தொகை ரூ.100 கோடிக்கு மேல் என்றும் கூறப்பட்டது.
ஈமு கோழி முதல் வங்கி மோசடி வரை
இங்கு பூதாகரமாக பேசப்பட்டது ஈமு கோழி மோசடி. விவரம் தெரியாமல் நடிகர், நடிகைகளும் ‘சிபாரிசு’ விளம்பரங்களில் வந்துபோக, மோசடிக் கிணற்றில் மறுபடியும் வீழ்ந்தனர் திருப்பூர் சுற்றுவட்டார அப்பாவிகள். இதில் மக்கள் பறிகொடுத்தது ரூ.5000 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது. சிறிதும் பெரிதுமாக 100-க்கும் மேற்பட்ட ஈமு பண்ணை நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டிருந்தன. சுசி ஈமு நிறுவனம் மீது மட்டும் ரூ.500 கோடி அளவுக்கு மோசடி புகார்கள் குவிந்தன. இதன் தலைமையிடம் ஈரோடு மாவட்டம் என்றாலும், அதிகம் பாதிக்கப்பட்டது திருப்பூர் மாவட்ட மக்கள்தான்.
தொடர்ந்து கிரானைட் நில மோசடி, காலேஜ் பார்ட்னர் மோசடி, பில்கேட்ஸுக்கே சாப்ட்வேர் புரொகிராம் செய்து தருவது(!) என கற்பனை நயம் மிக்க பல மோசடிகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.
கடந்த ஆண்டில், புதுவிதமாக வந்தது ஒரு மோசடி. ‘உங்கள் பனியன் கம்பெனி வங்கிக் கணக்கை உடனே புதுப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்கு முடக்கப்படும்’ பல பனியன் தொழில் அதிபர்களுக்கும் இமெயில் வந்தது. அவசர அவசரமாக சில தொழிலதிபர்கள் தங்கள் ஆடிட்டரிடம்கூட ஆலோசனை செய்யாமல் தங்கள் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளை இமெயிலிலேயே அனுப்பினார்கள். விளைவு.. அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் என அபேஸ். இதுதொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த 3 பேரும், மகாராஷ்டிர துணி வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
பனியன் வியாபாரம் என்ற பெயரில் இங்கே வந்துவிட்டு.... இணையதள மோசடிகளில் இறங்குவதோடு... ஹெராயின், கோகைன் போதைப் பொருட்களையும் நைஜீரியர்கள் சிலர் கடத்துகின்றனர் என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டும் அவ்வப்போது மிரட்டுகிறது.
மத்திய அரசுக்கே அல்வா
அந்நியச் செலாவணியை ஊக்கப்படுத்த பனியன் ஏற்றுமதியாளர்களுக்கு ‘டிராபேக் வரிச்சலுகை’ வழங்குகிறது மத்திய அரசு. அதாவது, அவர்கள் செலுத்தும் வரியில் ஒரு பகுதியை உரிய ஆவணங்கள் செலுத்தி திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். பனியன் ஏற்றுமதி செய்ததற்கான ரசீது களை அந்தந்த நாடுகளின் கஸ்டம்ஸ் முத்திரையுடன் சமர்ப்பிக்க வேண்டும். உழைப்பு, நேர்மையை அடையாளமாகக் கொண்ட இந்த ஊரில், விதிவிலக்காக சிலர் மீது குற்றசாட்டு கிளம்பியது... கழிவுப் பொருட்களை பேக் செய்து அனுப்பிவிட்டு, பனியன் என்று கணக்கு காட்டி கஸ்டம்ஸ் முத்திரை வாங்கியதாகவும்... இதற்கு கஸ்டம்ஸிலும் சிலர் உடந்தை என்றும் பரபரப்பாக குற்றச்சாட்டு எழுந்து சிலர் சிக்கினர்.
மத்திய அரசுக்கே பல கோடி ரூபாய் அல்வா கொடுத்திருப்பது அம்பலமானது. இந்த வகையில் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் சிலர் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் என்று திருப்பூரில் உள்ள சமூக ஆர்வலர்கள் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மனு அனுப்பினர். உடனே நடவடிக்கை எடுக்குமாறு அவர் போட்ட உத்தரவுக்கு எந்த விளைவும் இல்லை என்பது தனி சோகம்.
1,000 கோடிகளில் மோசடிகள்
ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பு என்று பல மோசடிகள் வந்து போனாலும் இந்திய அளவில் அதிர்ச்சியுடன் பேசப்பட்டது 'பாசி பாரெக்ஸ்' நிதி நிறுவன மோசடி. ஏமாற்றப்பட்ட தொகை ரூ.2,000 ஆயிரம் கோடி என்றார் புலன் விசாரணையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி. பொதுமக்களின் பணத்தை பிரித்து தரச்சொல்லி போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட, எரிகிற வீட்டில் கைவரிசை காட்டி லாபம் பார்த்தனர் சில போலீஸார். அந்த நிதி நிறுவன பெண் இயக்குநர் கமலவள்ளி கடத்தப்பட்டதாகவும், அவரை மிரட்டி ரூ.10 கோடி அளவுக்கு பணம் பறித்ததாகவும் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஜி பிரமோத்குமார், டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சண்முகய்யா, சப் இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ் உள்ளிட்டோர் மீது கைது நடவடிக்கை பாயும் அளவுக்கு விஸ்வரூவம் எடுத்தது. இந்த வழக்குகள் இன்னமும் கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கம் ‘பாசி' நிறுவன இயக்குநர்கள் மீது பணப் பரிவர்த்தனை வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடக்கிறது.
இதற்கிடையில், வெளிச்சத்துக்கு வந்தது ‘பைன் ப்யூச்சர்' மோசடி. அதில் ரூ.500 கோடிக்கு மேல் மக்கள் இழந்ததாகக் கூறப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT