Published : 13 Mar 2014 01:49 PM
Last Updated : 13 Mar 2014 01:49 PM

தருமபுரியில் மீண்டும் தாமரைச் செல்வனை நிறுத்திய திமுக: பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு காரணமா?

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குதான் தருமபுரி தொகுதியில் மீண்டும் தாமரைச்செல்வனை திமுக வேட்பாளர் ஆக்கியுள்ளது என அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான தாமரைச்செல்வனை கடந்தமுறை தருமபுரி தொகுதியில் நிறுத்தி எம்.பி-யாக்கியது திமுக. இந்த முறையும் அவரே தருமபுரிக்கு திமுக வேட்பாளர்.

தாமரைச்செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து தருமபுரி மாவட்ட திமுக-வின் முக்கிய நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’-விடம் பேசியதாவது, ’’பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக சார்பில் தாமரைச்செல்வன்தான் ஆஜராகி வருகிறார். அவரது சட்ட நுணுக்கம் வாய்ந்த செயல்பாடுகள் சில ஜெயலலிதா தரப்புக்கு கடும் சட்ட நெருக்கடிகளை உருவாக்கி வருவதை, திமுக தலைமை உற்று கவனித்து வந்துள்ளது.

அதைப் பாராட்டி அவரை ஊக்கப்படுத்தும் விதமாகவே தாமரைச் செல் வனுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறது திமுக. திருச்சி திமுக மாநாட்டில் தாமரைச்செல்வனின் பெயரைச் சொல்லி புகழ்ந்தார் கருணாநிதி. அதேபோல அண்மையில் தருமபுரி யில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின் ‘இந்த திருமண மேடையில் யானையின் காதில் புகுந்த இரண்டு எறும்புகள் அமர்ந்திருக்கின்றன.

ஒன்று, பர்கூர் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை தோற்கடித்த இப்போதைய கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம். மற்றொன்று, பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்டு ஜெயலலிதா தரப்பின் நிம்மதியை குலைத்துள்ள, தருமபுரியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன்’ என்று பேசினார். எனவே பெங்களூர் வழக்கில் தாமரைச்செல்வனின் சட்ட செயல்பாடுகளே அவருக்கு மீண்டும் வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளது’’ என்றார்.

அதுசரி, யானையின் காதில் புகுந்த இன்னொரு எறும்பான சுகவனத்துக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காதது, ஏனோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x