Published : 10 Apr 2017 06:28 PM
Last Updated : 10 Apr 2017 06:28 PM
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியில் ஒரே கோயிலில் ஐந்து கழுமரங்கள் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக இன்றும் உயிர்ப்புடன் தொடர்ந்து வழிபாட்டில் உள்ளன.
கழுவேற்றம்
கழுவேற்றம் என்பது கொடூரமான ஒரு மரணதண்டனையாக முற்காலத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளது. மரம் அல்லது இரும்பால் செய்யப்பட்ட கூர்முனையுள்ள கழுவில் எண்ணெய் தேய்த்து வழுவழுப்பாக்கி இருப்பர். கழுவேற்ற வேண்டியவர்களை நிர்வாணப்படுத்தி அவர்களின் ஆசனவாயை கழுவில் அமர்த்தி விடுவர். ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிகளில் அமைக்கப்படும் இத்தகைய கழுவில் ஏற்றப்பட்டவர்கள் பல நாட்கள் கதறி துடிதுடித்து உயிர் விடுவர். அவர்களின் உடல் நாய், நரி, கழுகு, பருந்து போன்றவற்றிக்கு உணவாகிவிடும். அரசை எதிர்ப்பவர்கள், திருடர்கள் போன்றவர்களுக்கு இதுபோன்ற தண்டனை வழங்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
கழுமர வழிபாடு
கழுவேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உயிர் அந்தக் கழுமரங்களில் உறைந்து தெய்வத்தன்மை அடைவதாக மக்கள் நம்புவதால் இத்தகைய கழுமரங்களை காலங்காலமாக வழிபட்டு வருகிறார்கள். பெரும்பாலும் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களையே மக்கள் வழிபடுகிறார்கள். கழுவேற்றப்பட்டு இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மட்டுமின்றி, சில இடங்களில் கழுவேறக் காரணமானவர்களின் உறவினர்களும் வணங்குகிறார்கள்.
கழுவேற்றம் நடந்ததன் நினைவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கல்லால் செதுக்கப்பட்ட கழுமரங்களை மக்கள் வணங்கி வருகிறார்கள். மரம், இரும்பால் ஆன பழமையான கழுமரங்கள் அழிந்துபோன நிலையில் கல்லால் செதுக்கப்பட்ட கழுமரங்களை புதியதாய் உருவாக்கி வழிபட்டு வருகிறார்கள். இத்தகைய கல் கழுமரங்களின் கீழ் அதில் உயிர் விட்டவர்களின் சிற்பங்களை செதுக்கி வைக்கிறார்கள். சில இடங்களில் கழுமரங்களே கருவறைத் தெய்வமாக உள்ளன. மக்கள் தெய்வங்களாக இவர்கள் வணங்கப்பட்டு வருகிறார்கள். இவ்வகை வழிபாடுகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கோவிந்தன் கோயிலில் ஐந்து கழுமரங்கள் உள்ளன. ஒரே கோயிலில் இவ்வளவு கழுமரங்கள் காணப்படுவது இங்கு மட்டுமே. இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு கூறியதாவது,
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணியிலிருந்து கமுதி வழியாக மதுரை செல்லும் வழித்தடத்தில் அதிக அளவில் கழுமரங்கள் உள்ளன. உத்தரகோசமங்கை அருகே கண்ணன்குடி, கோவிந்தனேந்தல், கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் தலா மூன்று கழுமரங்கள் உள்ளன. களரியில் கழுமரம் கருவறை தெய்வமாக வணங்கப்படுகிறது.
ராமநாதபுரம் அருகே கழுவன் பொட்டல் என்ற ஊர் உள்ளது. இங்கு கழுவேற்றம் நடந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் அருகில் ஒரு பள்ளபச்சேரி உள்ளது.
பள்ளபச்சேரி கோவிந்தன் கோயிலில் உள்ள கழுமரங்களில் தெற்கத்தி முனியசாமி, கோவிந்தன், ஊர்வலசாமி, கருப்பணன், நொண்டிக்கருப்பணன் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இரு கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தி காட்சியளிப்பதால் இவர்கள் போர் வீரர்களாக இருந்திருக்கலாம்.
கழுமரங்களின் நடுவே இராக்கச்சியம்மன், இருளாயி, காளி ஆகிய பொம்மடி தெய்வங்கள் உள்ளன. இங்கு பெண் தெய்வங்களுக்கு கோழியையும், ஆண் தெய்வங்களுக்கு ஆடுகளையும் பலி கொடுக்கிறார்கள். அவித்த தட்டைப்பயறு, கானம், கருப்பட்டி, தேங்காய், வாழைப்பழம், பச்சரிசி, பலகாரம் ஆகியவற்றை பள்ளையம் இட்டும் வணங்குகிறார்கள்.
இந்த கழுமரங்களில் உள்ள நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இரு கல்வெட்டுகளில் இக்கோயிலை வழிபடும் கோடாங்கி மகன் உடையான், இராக்கன் மகன் கருப்பணன் சாத்தார் ஆகிய இரு வகையறாக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராக்கச்சியம்மனை வணங்கும்போது “கட்டுச்சோறு கட்டி கனத்தவழி போறோம்” என்று சொல்லி கோவிலைச் சுற்றி வருகிறார்கள். இதன்மூலம் இவ்வூரில் இருப்பவர்கள் இடம்பெயர்ந்து இங்கு வந்துள்ளதை அறிய முடிகிறது.
மதுரை தொடர்பு
மதுரையில் சமணர்களை கழுவேற்றினர் என பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழுமர வழிபாடு ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட பாண்டியநாடு முழுவதும் பல இடங்களில் காணப்பட்டாலும், இதற்கான காரணங்கள் ஒவ்வொரு பகுதியிலும் வேறுவேறாக உள்ளன, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT