Published : 28 Jan 2015 05:26 PM
Last Updated : 28 Jan 2015 05:26 PM

இலங்கைத் தமிழ் அகதிகளில் 70% பேர் தாயகம் செல்ல விருப்பம்: நாடாளுமன்ற நிலைக்குழு தகவல்

மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் பெரும்பான்மையோர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாக, கருத்து கேட்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரையிலும் 3 லட்சத்து 4 ஆயிரத்து 259 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இதில் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் அரசு உதவி மற்றும் சர்வதேச உதவிகள் பெற்று சுயமாக இலங்கைக்குத் திரும்பி உள்ளனர். தற்போது தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். அவர்களில் 64 ஆயிரத்து 924 பேர், 107 முகாம்களில் வசித்து வருகிறார்கள்.

இலங்கையில் ராஜபக்சவின் ஆட்சி முடிவுக்கு வந்து தற்போது சிறிசேனா புதிய அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள அகதிகள் மற்றும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கருத்து கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குப் பிறகு சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழக அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகளில் 70 சதவீதம் பேர் தங்கள் சொந்த நாடான இலங்கைக்கு திரும்பிச் செல்லவே விரும்புகின்றனர். இதில் 20 சதவீதத்தினர் மட்டுமே தமிழகத்தில் இருக்க விரும்புகின்றனர். மேலும் 10 சதவீதம் பேர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தால் இலங்கைக்கு செல்லத் தயார் என்கின்றனர்.

இந்திய - இலங்கை இரு நாட்டு அரசுகளும் கூட்டு முயற்சி செய்து மீனவர்கள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 87 படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் அதிகாரிகள் பேசி முடிவெடுக்க வேண்டும்'' என்று சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கே.டி.எஸ். துளசி, ரஜனி பட்டேல், டாக்டர். அன்சுல் வர்மா, டாக்டர். சம்பத், வரபிரசாத் ராவ், பி.வி.நாயக். கே.பி. சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x