Published : 28 May 2017 09:02 AM
Last Updated : 28 May 2017 09:02 AM
ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய கால் கிலோ விதை நெல்லை மட்டும் பயன்படுத்தி ஆலங்குடி பெருமாள் என்ற விவசாயி சாதனை புரிந்து வருகிறார்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடி கிராமத் தைச் சேர்ந்தவர் பெருமாள். ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய 50 கிலோ, 30 கிலோ என விதை நெல்லைப் பயன்படுத்தி வரும் காலகட்டத்தில், இவர் வெறும் கால் கிலோ விதை நெல்லை மட்டுமே பயன்படுத்துகிறார். ஒரு ஏக்கர் சாகுபடிக்கான நாற்றங்கால் அமைக்க ஒரு சென்ட் நிலம் போது மானது என்றும் அவர் கூறுகிறார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “ஒரு சென்ட் நிலத்தில் விதைகளை அங்கொன்றும் இங் கொன்றுமாக பரவலாக விதைக்கி றேன். நன்கு இடைவெளி விட்டு முளைக்கும் அந்த நாற்றுக்கள் நிறைய தூர்களுடன் செழித்து வளர்கின்றன. 25 நாட்களுக்குப் பிறகு நடவு நடுகிறேன். நடவு வயலில் ஒரு பயிருக்கும், இன்னொரு பயிருக்கும் இடையே 50 செ.மீ. இடைவெளி விட்டு நடுவது மிக முக்கியமானது. இவ்வாறு பயிர்களுக்கு இடையே 50 செ.மீ. இடைவெளி விட்டு நடும்போது சூரிய ஒளி நன்றாக நிலத்தில் படுவது, பயிர்களுக்கு இடையே நல்ல காற்றோட்டம், புகையான் போன்ற பூச்சித் தாக்கு தல் அறவே இல்லாதது என பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் பயிர்கள் தாராளமாக வேர் விட்டு வளர்வதற்கும் இடம் கிடைக்கும்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு விதையில் இருந்து முளைத்து வந்த நாற்று, 100 முதல் 125 தூர்கள் வரை கொண்ட பயிராக செழித்து வளரும். இவ்வாறு தூர்கள் அதிக அளவில் இருப்பதால் ஒவ்வொரு தூரிலும் ஏராளமான நெல் மணிகள் விளையும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எனது சொந்த அனுபவத்தில் இந்த தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தேன். ஆலங்குடி பெருமாள் நடவு முறை என்ற பெயரில் எனது நாற்றங்கால் தொழில்நுட்பமும், நடவு தொழில்நுட்பமும் இப்போது பலரால் பின்பற்றப்படுகிறது.இந்த நடவு முறை மூலம் ஒரு ஏக்கரில் 3 டன்னுக்கு மேல் எனக்கு மகசூல் கிடைத்து வருகிறது. அதிகபட்சமாக 2011-ம் ஆண்டில் 4 டன் மகசூல் எடுத்துள்ளேன்” என்கிறார் பெருமாள்.
ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய கால் கிலோ விதை நெல் போதுமானது என்பதை பலரும் நம்ப மறுக்கின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக விதை தெளிப்பது முதல், நாற்று நடுவது, அறுவடை வரை நூற்றுக்கணக்கான விவசாயிகளை திரட்டி, அவர்கள் முன்னிலையிலேயே தனது சாகுபடி பணிகளை பெருமாள் செய்து வருகிறார்.
இந்த ஆண்டுக்கான நெல் சாகு படி பணிகளை தொடங்கியுள்ள அவர், வரும் 29-ம் தேதி (திங்கள் கிழமை) மாலை 4 மணிக்கு தனது வயலில் விதை தெளிக்க திட்ட மிட்டுள்ளார். தனது சாகுபடி தொழில் நுட்பம் பற்றி அறிய விரும்பும் விவசாயிகள் நாளை விதை தெளிக்கும்போது நேரில் வந்து விளக்கம் பெறலாம் என பெருமாள் அழைப்பு விடுத்துள்ளார். அவரை 94868 35547 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT