Published : 20 Mar 2014 04:49 PM
Last Updated : 20 Mar 2014 04:49 PM
தமிழக பாஜக கூட்டணியில் சுமுக முடிவு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டுப் பட்டியலை பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜேகே (இந்திய ஜனநாயக கட்சி), கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தின. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை இறுதிகட்டத்தை எட்டியது.
இதையடுத்து தமிழக பாஜக தேர்தல் குழு டெல்லி தலைமையை சந்தித்து இறுதி செய்யப்பட்ட பட்டியலை ஒப்படைத்தது.
சென்னையில் ராஜ்நாத் சிங்
இதையடுத்து இறுதி செய்யப்பட்ட தொகுதி பங்கீட்டுப் பட்டியலை வெளியிடுவதற்காக பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை காலை சென்னை வந்தார். அவரை பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் மயிலாப்பூர் நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு அனைவரும் மதியம் 1 மணியளவில் வந்தனர்.
ராகுகாலத்தால் தாமதம்
கூட்டணி தலைவர்கள் அனைவரும் வந்த நிலையில் மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை ராகு காலம் என்பதால் கூட்டணி அறிவிப்பு 3 மணிக்கு மேல் வெளியாகும் என்று கூறப்பட்டது. இதையடுத்து சரியாக 3.55 மணிக்கு முதல் நபராக வைகோ மேடைக்கு வந்தார்.
அவரைத் தொடர்ந்து விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ், பச்சமுத்து, ஈஸ்வரன், சுதீஷ் ஆகியோர் புடைசூழ 4.05 மணியளவில் ராஜ்நாத் சிங் மேடையேறினார். அதன் பிறகு அடுத்த சில நிமிடங்களில் தொகுதி பங்கீட்டு பட்டியலை அறிவித்தார்.
தொகுதிகளின் விவரங்கள்
தேமுதிக-14, பாஜக-8, பாமக-8, மதிமுக-7, ஐஜேகே-1, கொமதேக-1 என்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை ராஜ்நாத் சிங் அறிவித்தார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பட்டியலை வெளியிட்டார்.
கூட்டணி கட்சிகளின் தொகுதி விவரம்:
தேமுதிக-14
திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருநெல்வேலி.
பாஜக-8
தென் சென்னை, வேலூர், நீலகிரி, கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி.
பாமக-8
அரக்கோணம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.
மதிமுக-7
காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, விருதுநகர், பெரும்புதூர், தென்காசி, தூத்துக்குடி
ஐஜேகே-1
பெரம்பலூர்.
கொ.ம.தே.க-1
பொள்ளாச்சி.
தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டபோது தேமுதிக தரப்பில் அதன் தலைவர் விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் சுதீஷ், பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ், அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஐஜேகே தலைவர் பச்சமுத்து, கொமதேக தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கூட்டணி அறிவிப்புகள் வெளியான பிறகு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சற்று தாமதமாக வந்து கலந்துகொண்டார்
இக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தமிழ்நாடு கலை, கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் பழம்பெருமை வாய்ந்த மாநிலமாகும். உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்கள் கோடிக்கணக்கில் வசிக்கின்றனர். பாரதியார், திருவள்ளுவர் போன்றவர்கள் வாழ்ந்த பூமி இது. தமிழக அரசியலில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் இன்று மிக முக்கியமான தருணத்தில் நிற்கிறோம். இதுவரை தென்னகத்திலிருந்து எத்தனையோ கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜேகே, கொமதேக ஆகிய கட்சிகளுடன் தற்போது உருவாகியுள்ள கூட்டணி ரொம்பவே முக்கியமானது.
நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்துள்ள தலைவர்களை அன்போடு வரவேற்கிறேன். அதேசமயம் இக் கூட்டணியை உருவாக்குவதற்காக அயராது பாடுபட்ட தமிழருவி மணியனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT