Published : 29 May 2017 10:38 AM
Last Updated : 29 May 2017 10:38 AM
தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள மத்திய அரசின் வெற்றிக் கதைகளை தயாரிக்க உத்தரவிடும் தமிழக அரசின் செயல் மன்னிக்க முடியாத துரோகம். மாநிலத்தில் இருப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பா.ஜ.க. ஆட்சியா என்பது புரியாத மர்மமாக இருக்கிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகமெங்கும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. தாய்மார்கள் மதுக்கடைகளை எதிர்த்து தன்னெழுச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினைகள் பற்றியெல்லாம் தகவல் திரட்டி ஆளும் அதிமுக அரசுக்கு கொடுத்து மக்களின் குறைகளை தீர்க்க முடியாமல் கையறுந்த நிலையில் நிற்கும் அதிமுக அரசின் கீழ் உள்ள தமிழக மக்கள் செய்தி தொடர்புத்துறை மத்திய அரசின் திட்டங்கள் குறித்து "வெற்றிக் கதைகள்" தயாரித்து, அதை மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒப்புதல் பெற்று தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு செய்தித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்து இருப்பது அத்துமீறிய செயல் மட்டுமல்ல- அதிகாரமற்ற செயலாக அமைந்திருக்கிறது.
மாநில அரசின் திட்டங்களையும், அந்த அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களையும் மக்களுக்கு விளம்பரம் செய்யவே மாநில செய்தி தொடர்புத் துறை உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை விளம்பரம் செய்ய தனியாக 'பிரஸ் இன்பர்மேஷன் பீரோ' என்று ஒரு அமைப்பு தனியாக மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.
இந்நிலையில் அதிமுக அரசின் கீழ் உள்ள செய்தி தொடர்பு துறை மத்திய பா.ஜ.க. அரசின் வெற்றிக்கதைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது இந்த ஆட்சி எந்த அளவிற்கு மத்திய அரசின் பிடியில் சிக்கி மாநில உரிமைகளைப் பறிகொடுத்து விட்டு நிர்கதியாக நிற்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
வருமான வரித்துறை ரெய்டுகளில் சிக்கியும், ஊழல் புகார்களில் மூழ்கியும் மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் அதிமுக முதலமைச்சரும், அமைச்சர்களும் மத்திய அரசின் "வெற்றிக் கதைகளை" தயாரித்தாவது தப்பித்துக் கொள்ளலாமா என்று செயல்படுவது மாநிலத்தில் இருப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பா.ஜ.க. ஆட்சியா என்பது புரியாத மர்மமாக இருக்கிறது.
அதிமுக விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிக் கொண்டே தமிழகத்தை 'கொல்லைப்புறமாக' பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மறுத்து விட்டது. சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியும் நீட் தேர்வு எழுத தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்பது மட்டுமின்றி சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்குக் கூட அனுப்ப மறுத்து விட்டார்கள். மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டு அத்திட்டத்திற்கு ஒப்பந்தமே விட்டு விட்டார்கள்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல் தடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து விட்டு இப்போது மீனவர் கொலை செய்யப்படும் நிலைக்கு இலங்கை ராணுவத்தின் அத்துமீறல் போய் விட்டது. தங்கள் வாழ்வாதாரத்தின் அடிப்படையான மீன்பிடி படகுகளையும் பறிக்கும் கொடுஞ்செயலை இலங்கை ராணுவம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தைப் புரட்டிப் போட்ட வெள்ளம், கடும் பாதிப்புகளை உருவாக்கிய வர்தா புயல், மாநில பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்துள்ள வறட்சி உள்ளிட்ட எந்த பேரிடர் பாதிப்புகளுக்கும் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்க மறுத்து விட்டது. ஆனால் தமிழக மக்களை புறக்கணிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் அதிமுக அரசுக்கு 'வெற்றிக் கதைகளாக' தெரிவது வேதனையாக இருக்கிறது.
தங்கள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் 'வருமானவரித்துறை' 'சி.பி.ஐ' 'அமலாக்கத்துறை' என்ற கத்திகளைப் பார்த்துக் கதறுவதின் வெளிப்பாடுதான் 'வெற்றிக் கதை' தயாரிப்பதற்கான முக்கிய காரணம். இந்தப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சி தலைவர்களையும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளையும் பயன்படுத்துவது தாங்கொண்ணாத் துயரத்தில் தவிக்கும் தமிழக மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விபரீத செயலாகும்.
மத்தியில் இருந்த பல அரசுகள் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த முன்னுதாரணங்கள் இருந்தும், 'விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது மாநில அரசின் பொறுப்பு' என்று அடவாடியாக கூறி வரும் மத்திய அரசுக்கு பாராட்டு விழா நடத்த அதிமுக அரசு முனைவதும் தற்கொலை செய்து கொண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் டெல்லியில் போராடிய விவசாயிகளின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் செயலாகும்.
தமிழக மக்கள் அளித்த வாக்குகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டு தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் பா.ஜ.க. முன்பு மண்டியிடுவது மன்னிக்க முடியாத துரோகம். தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ள முதலமைச்சரும், அமைச்சர்களும் தினந்தோறும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு துதி பாடுவதும், தூபம் போடுவதும் தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல். ஏழை விவசாயிகளை, சிறுபான்மை மக்களை பாதிக்கும் மாட்டிறைச்சி தடை பற்றி வாய் திறக்காமல், மத்திய அரசுக்கு காவடி எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டும் இந்த அதிமுக அரசு விரைவில் மக்களின் கோபத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
மாநிலத்திற்கு நல்ல வளர்ச்சி திட்டங்களை, மாநில அரசின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரு மத்திய அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வது மத்திய-மாநில உறவுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஆனால் அரசியல் ரீதியாக லாபமில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்தி, மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கும், தாண்டவமாடும் வறட்சிக்கும் கூட நிதி ஒதுக்காமல் தமிழகம் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று வேடிக்கை பார்க்கும் ஒரு மத்திய அரசுக்கு சாமரம் வீசும் அதிமுக அரசு வாக்களித்த மக்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படுகிறது என்பதுதானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
அதிமுக அரசுக்கு உள்ளபடியே மக்கள் நலனில் அக்கறை இருந்தால் இதுவரை பிரதமர் நரேந்திரமோடியிடம் கொடுத்த கோரிக்கை மனுக்களின் கதி என்ன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன? போன்றவற்றை தமிழக மக்களுக்கு விளக்கி விட்டு 'பா.ஜ.க.விற்காக வெற்றிக் கதைகள்' தயாரிக்கட்டும்.
அப்படி எந்த விளக்கமும் சொல்லாமல் மத்திய அரசின் எடுபிடியாக செயல்படுவதுதான் அதிமுக அரசுக்கு பிடித்த விஷயம் என்றால், பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களை சந்தித்து 'புதிய மக்கள் தீர்ப்பை' பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதற்கிடையில் 'வெற்றிக் கதைகள்' தயாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT