Published : 25 Jan 2017 12:42 PM
Last Updated : 25 Jan 2017 12:42 PM
அடிப்படை வசதிகள் இல்லாத கிளை நூலங்களில் தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்ய தனியார் நிறுவனங்களின் உதவியை கோருகிறது பொது நூலகத் துறை.
தமிழகத்தில் பொது நூலகத் துறையின் கீழ் மாவட்ட மைய நூலகம், கிளை நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு லட்சக் கணக்கான புத்தகங்கள் வாசகர் களுக்காக வைக்கப் பட்டுள்ளன. நூலகங்களுக்கு தினமும் பல லட்சம் வாசகர்கள் வந்து செல்கின்றனர். சிறுவர்கள், ஊனமுற்றோருக்குப் பயன்படும் வகையில் மாவட்ட மைய நூலகங்களில் சிறுவர் நூலகங்களும், மாற்றுத் திற னாளிகளுக்கு சிறப்பு நூலகங் களும் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், பல்வேறு பகுதிகளில் கிளை நூலகங்கள், பகுதி நேர நூலகங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதுபோன்ற நூலகங்களில் நூற்றுக்கணக்கான நூல்கள் வாசகர்களுக்குப் பயன்படாத வகையில் மூலையில் மூட்டைகட்டி வைக்கப்பட்டுள்ளன. போதிய இடவசதி, இருக்கை வசதி, இருப்பிட வசதி, மின் வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பல நூலகங்கள் முடங்கியுள்ளன.
இந் நிலையை மாற்றவும், தனியார் பங்களிப்புடன் நூலகங்களின் தரத்தை உயர்த்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொள்ளவும், புரவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, சிறந்த பங்களிப்பு உள்ள புரவலர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கவும் பொது நூலகத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்களின் "சமுதாய பங்களிப்பு" திட்டத்தின் கீழ் நிதியையும், தேவையான வசதிகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களுக்கும் பொது நூலகத் துறை அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
பொது நூலகங்களில் சிறந்த நூலகச் சேவையை வழங்கும் வகையிலும், நூலகங்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு சமுதாய பங்களிப்பு திட்டத்தில் இணைந்து நூலகத்திற்குத் தேவையான உபகரணங்கள், நூலகத்தைச் சுற்றி பராமரித்தல், நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டுதல், நூலகத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அத்துடன் தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் பொருள் உதவிகளுக்கு நூலகத் துறையிடம் இருந்து வரி விலக்கு சான்று வழங்கப்படும் எனில் பொருள் உதவிகள் சேருவது எளிதாக அமையும். தொழில் நிறுவனங்கள் பெரும் புரவலர்களாக நூலகத்தில் தன்னை இணைத்துக் கொண்டால் அவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை, சிறப்பு நூல் பெறும் அட்டை, எந்த நூலகத்திலும் நூலைப் பெறும் வசதி ஆகியவற்றை மேற்கொள்ளவும் பொது நூலகத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT