Published : 21 Feb 2014 12:00 PM
Last Updated : 21 Feb 2014 12:00 PM
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இதுவரை 69 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறனை ஒரு மாதத்தில் எட்டும் என்று கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் நியூக்ளியர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வுப் பேரணி விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள், மருத்துவ சிகிச்சை முறைகள், மின் உற்பத்தி மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் நியூக்ளியர், அணு பயன்பாடு அதிகமாக உள்ளது.
இது குறித்து மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கையான முறையில் காற்று, நீர் மூலம் அணு உலைகளை குளிரூட்டும் தொழில்நுட்பம் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கூடங்கும் அணுமின் நிலையத்தில் தற்போது 670 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உயர்ந்த மற்றும் இயற்கை சார்ந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுபோன்ற தொழில்நுட்பங்கள் வளர நாம் வழிவகுக்க வேண்டும். இதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணிகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறோம். கூடங்குளத்தில் உள்ள முதலாவது யூனிட் அணு உலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 69 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் யூனிட்டை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கப்படும்.
சீனாவில் 29 இடங்களில் அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. நம்நாட்டில் கூடங்குளம் உள்பட 7 இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அணுசக்தி மூலம் தேவையான மின்சாரத்தைப் பாதுகாப்பாக உற்பத்தி செய்து வழங்க முடியும்.
அணுசக்தி கட்டுப்பாட்டுக் குழுவின் அனுமதி கிடைத்ததும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதலாவது யூனிட்டில் 100 சதவிகித இலக்கான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் இன்னும் ஒரு மாதத்தில் எட்டப்படும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 40 சதவிகிதம் பாதுகாப்புக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
மிகவும் பாதுகாப்பாக இயங்கும் வகையில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள பழமையான கோயில்கள், கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னரே அணுமின் நிலையம் அமைக்க கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டது.
சுனாமி, நிலநடுக்கம் போன்றவை ஏற்பட்டால் அணுமின் நிலையத்தை பாதிக்காத வகையில் கடல் மட்டத்தைவிட 25 அடி உயரத்தில் அணு உலைக்கான தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரிடர் ஏற்பட்டால் ஒருசில நொடிகளில் பணிகள் அனைத்தும் தானாக நிறுத்தப்படும் விதத்திலும் கூடங்குளம் அணுமின் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இயங்குகிறது. நாள்தோறும் 150 முதல் 200 மாணவர்கள், பொதுமக்கள் அணுமின் நிலையத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். இதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர் என்றார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதன்மைப் பொறியாளரும் மக்கள் விழிப்புணர்வுக் குழுத் தலைவருமான எஸ்.காளிராஜன், செயலர் பண்டாரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT