Published : 09 Feb 2014 10:55 AM
Last Updated : 09 Feb 2014 10:55 AM

தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கியும் திட்டங்களை நிறைவேற்றவில்லை: வழக்கு தொடரப்போவதாக மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கியும் பரிந்துரைக்கப் பட்ட திட்டங்கள் நிறைவேற்றப் படவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக பொருளாளரும் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்காக ரூ.5 லட்சம் வீதம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தி ருந்தார்.

அந்த நிதியில் இருந்து முதல்கட்டமாக, 4 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன. எம்எல்ஏ அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஏ.பாலாஜி, சுகுணா, பி.வி.ருக்மாங்கதன், கணேசன் ஆகிய 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த நிதி ஆண்டுக்கு ரூ.2 கோடி வழங்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.6 கோடியில் ரூ.5.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிழற்குடை அமைத்தல், அங்கன்வாடி, சத்துணவு கூடங்கள், சமூக நலக்கூடங்கள் கட்டுதல், சாலை சீரமைப்பு, பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை கடிதங்கள் அனுப்பப்பட்டன.

ஆனால், இதுவரை ரூ.18 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு 66-வது வார்டு கிருஷ்ணா நகரில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5.46 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்திலும் பேச அனுமதிப்பதில்லை. எனவே, இந்தப் பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா என சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x