Published : 13 Mar 2014 12:31 PM
Last Updated : 13 Mar 2014 12:31 PM
தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னை உள்பட 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 26 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பின்னர் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 5 சதவீதம் குறைத்து (55 சதவீதமாக) அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால், தகுதித்தேர்வில் கூடுதலாக சுமார் 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு (முதல் தாளில் தேர்ச்சி பெற்றோர்) மார்ச் 12-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என்றும் அதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
தேர்தல் ஆணையம் அனுமதி
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிப்பு கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டதால் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் பிரச்சினை எழுந்தது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதி வேண்டி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் கடிதம் எழுதினார்.
தேர்தல் ஆணைய அனுமதி கிடைத்ததையடுத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணியை தொடங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது. ஒவ்வொரு மையத்திலும் தலா 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவினர் 25 பேரின் சான்றிதழ்களை சரிபார்ப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு மண்டலத்திலும் 250 பேர் வீதம் 5 மண்டலங்களிலும் சேர்த்து தினமும் சுமார் 1,250 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மண்டலம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. முதல் நாளில் 280 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சில ஆசிரியைகள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர்.
முன்னதாக, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் பதிவு செய்வது குறித்து மையத்தின் மண்டல அதிகாரியான திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) எம்.ராஜமாணிக்கம், ஒருங்கிணைப்பு அதிகாரியான சென்னை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) முதல்வர் ஆர்.ஐயப்பன் ஆகியோர் விளக்கிக்கூறினர். சான்றிதழ் சரிபார்ப்பு பணியை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் டி.சீதாலட்சுமி ஆய்வுசெய்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஜெயராமன் மற்றும் ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டனர்.
ஏப்ரல் 10-ல் முடிவடைகிறது
சென்னை மண்டலத்தில் 3,877 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. இப்பணி மார்ச் 31-ம் தேதி வரை நடக்கும் என்று மண்டல அதிகாரி ராஜமாணிக்கம் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஏப்ரல் 10-ம் தேதி வரை நடக்கும். அதன்பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT