Published : 16 Jun 2015 10:05 AM
Last Updated : 16 Jun 2015 10:05 AM

கடலில் மாயமான விமானத்தை ரோபோடிக் வசதியுடன் கூடிய கப்பல் மூலம் தேட முடிவு

காணாமல்போன விமானத்தை தேடும் பணியில் 7-வது நாளாக கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தேடுதல் பணி நடைபெற்று வரும் இடத்தில் விசைப்படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடந்த 8-ம் தேதி இரவு மாயமானது. அந்த விமானத்தில் 2 விமானிகள் உட்பட 3 பேர் இருந்தனர்.

விமானத்தை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர காவல் படை மற்றும் புதுச்சேரி கடலோர காவல் படையினர் கடந்த 6 நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இந்தப் பணியில் 8 கப்பல்களும் ‘ஐசிஜி’ போர் விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் ‘சாகர்நிதி’ என்ற ஆய்வுக் கப்பலும் நேற்று முதல் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நீர்மூழ்கி கப்பல் ஒன்று நேற்றுமுன்தினம் நடத்திய தேடுதலின்போது கடலூர்-நாகை இடையே பழையாறு அருகே 850 மீட்டர் ஆழத்தில் இருந்து சமிக்ஞை கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதி கடலோர காவல் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக கடலோர காவல்படை வட்டாரங்கள் கூறுகையில், ஆழ்கடலுக்குள் சென்று தேடுவதற்கு தனியார் கப்பலின் உதவியை நாடியுள்ளோம். செயற்கைக்கோள் புகைப்படங்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோபோடிக் வசதியுடன் கூடிய தனியார் கப்பல் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் கிடைத்த பிறகே தேடுதல் பணிகள் தீவிரமாகும் என்று தெரிவித்தன.

இதனிடையே கடலுக்கு அடியிலிருந்து வரும் சமிக்ஞை காணாமல்போன விமானத்தில் இருந்துதான் வருகிறதா என்பது இன்று பிற்பகலுக்குள் ஊர்ஜிதம் செய்யப்படும் என்று கடலோர காவல் படை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x